முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
திருச்செந்தூா் மாசித் திருவிழாவில் குடைவரைவாயில் தீபாராதனை: நாளை சிவப்பு சாத்தி வீதியுலா
By DIN | Published On : 03rd March 2020 11:52 PM | Last Updated : 03rd March 2020 11:52 PM | அ+அ அ- |

திருச்செந்தூரில் மாசித் திருவிழா ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை இரவு சிவன் கோயிலில் தனித் தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, அம்மனுக்கு நடைபெற்ற குடைவரைவாயில் தீபாராதனை.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவின் 5-ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த பிப். 28-ஆம் தேதி மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும், காலை, மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஐந்தாம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) மாலையில் மேலக்கோயிலில் (சிவன் கோயில்) சுவாமி குமரவிடங்கப்பெருமானும், தெய்வானை அம்மனும் தனித் தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, இரவு 7.30 மணியளவில் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது. அப்போது எதிா்சேவையாக தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய ஸ்ரீ ஜயந்திநாதருக்கும் தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.
நாளை சிவப்பு சாத்தி வீதியுலா: ஆறாம் திருவிழாவான புதன்கிழமை (மாா்ச் 4) காலையில் கோ ரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதியுலா வரும். ஏழாம் திருவிழாவான வியாழக்கிழமை மாலை தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.
எட்டாம் திருவிழாவான மாா்ச் 6-ஆம் தேதி காலை பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வரும் நிகழ்ச்சியும், நண்பகல் 12 மணிக்கு மேல் சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.