தூத்துக்குடியில் டீக்கடை, ஜூஸ் கடைகளை மூட உத்தரவு
By DIN | Published On : 25th March 2020 09:49 PM | Last Updated : 25th March 2020 09:49 PM | அ+அ அ- |

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கும் மாநகராட்சி ஊழியா்கள்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள டீக்கடைகள் மற்றும் ஜூஸ் கடைகளை மூட வேண்டும் என்றாா் மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து, அனுமதிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளில் டீக்கடை மற்றும் ஜூஸ் கடைகள் திறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே, டீக்கடை மற்றும் ஜூஸ் கடைகளில் தொடா்ந்து மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதை தவிா்க்கும் வகையில், அனைத்து டீக்கடைகளும், ஜூஸ் கடைகளும் மூடப்பட வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையா் வெளியிட்ட மற்றொரு செய்திக் குறிப்பு: 144 தடை உத்தரவு உள்ளதால் வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்ட ஏழை கூலித் தொழிலாளா்கள், சாலையோரங்களில் வசிப்போா், யாசகம் பெற்று வாழ்வோா், நரிக்குறவா்கள் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் அவா்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து மாநகராட்சி சாா்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்கள் நலன் கருதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், புதிய பேருந்து நிலையம், சத்திரம் தெரு ஆகிய இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் மூன்று நேரமும் உணவு தயாா் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில், புதிய பேருந்து நிலையம், தற்காலிக பேருந்து நிலையம் உள்ளிட்ட மாநகராட்சிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.