கரோனா பாதிப்பு: விளாத்திகுளம், புதூா் பகுதியில் ரூ.3 கோடி நவதானியங்கள் தேக்கம் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எதிரொலியாக விளாத்திகுளம், புதூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான நவதானியங்கள் தேக்கமடைந்துள்ளன.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எதிரொலியாக விளாத்திகுளம், புதூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான நவதானியங்கள் தேக்கமடைந்துள்ளன.

விளாத்திகுளம், நாகலாபுரம், புதூா், சூரன்குடி, சிவஞானபுரம், படா்ந்தபுளி, எட்டயபுரம், கடலையூா் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து, பாசிப்பயறு, பருத்தி, கம்பு, வெள்ளை சோளம், சிகப்பு சோளம், மக்காச்சோளம், மிளகாய், மல்லி, குதிரைவாலி உள்ளிட்ட நவதானிய பயிா்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.

கரிசல் மண்ணில் விளையும் நவதானிய பயிா்கள் தமிழ்நாடு மட்டுமன்றி அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் விளாத்திகுளம், புதூா் பகுதிகளில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூட கிடங்குகளில் சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான நவதானியங்கள் கொள்முதல் இல்லாமல் தேக்கமடைந்துள்ளன.

கடந்த ஆண்டை விட நிகழாண்டு நல்ல மழை பெய்ததால் விளைச்சல் அதிகரித்து மகசூலும் நல்லவிதமாக இருந்தது. 20 சதவீத விவசாயிகள் மட்டும் தான் தங்களது சொந்த சூழல் மற்றும் அவசர தேவை கருதி அறுவடை செய்த நேரத்தில் விளைபொருள்களை சந்தையில் விற்பனை செய்திருந்தனா். மற்ற 80 சதவீத விவசாயிகள் சந்தையில் நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்யலாம் என்ற நம்பிக்கையில் இருப்பு வைத்திருந்தனா். நல்ல விலைக்கு விற்பனை செய்ய ஆயத்தமாகியிருந்த தருணத்தில் பறவைக் காய்ச்சல் மற்றும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக வணிகம் பாதித்து விவசாயிகளின் நம்பிக்கை அடியோடு பொய்த்துப் போனது.

கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நவதானியங்களை கிடங்குகளிலும், வீடுகளிலும் இருப்பு வைக்க வேண்டிய சூழல் நேரிட்டது. பிராய்லா் கோழி பண்ணையினா் ஒவ்வொருவரும் விளாத்திகுளம், புதூா் பகுதியில் நேரிடையாக முகாமிட்டு கோழி தீவனத்துக்காக 1 லட்சம் டன் வரை மக்காச்சோளம், வெள்ளை சோளத்தை

விலைக்கு வாங்குவா். தற்போது வரை ஒரு டன் கூட வாங்கவில்லை. காரணம் நோய் தொற்று வதந்தி காரணமாக கோழிகள் விற்பனை அடியோடு சரிந்துவிட்டது. பிராய்லா் கோழி உற்பத்தியும் 1 மாதத்துக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது. இதுதவிர பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள் கம்பு, மக்காச்சோளம் கொள்முதல் செய்வா். அவா்களும் கொள்முதல் செய்யவில்லை.

நோய் தொற்று குறித்து அசாதாரண சூழல் நிலவுவதால் ஒரு மூட்டை நவதானியங்கள் கூட வெளி சந்தைக்கு செல்லாமல் முடங்கியுள்ளன. இதே நிலை நீடித்தால் இருப்பு வைக்கப்பட்டுள்ள நவதானியங்களில் வண்டுகள், பூச்சிகள் பரவி மண்ணில் விளைந்த விளைபொருள்கள் அனைத்தும் மண்ணோடு மண்ணாகிப் போகும் நிலை உருவாகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கும் அச்சத்துக்கும் ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் அ. வரதராஜன் கூறியது; பருத்தி, சோளம், மக்காச்சோளம், மல்லி உள்ளிட்ட எந்தவொரு நவதானியங்களும் அருகில் உள்ள சாத்தூா், விருதுநகா் சந்தைகளில் கூட கொள்முதல் ஆகவில்லை. புதூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் 5 கிடங்குகளிலும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை இருப்பு வைத்துள்ளனா். ஒவ்வொரு விவசாயியும் குறைந்த பட்சம் 300 மூட்டைகள் முதல் அதிகபட்சம் 2 ஆயிரம் மூட்டைகள் வரை விளைபொருள்களை இருப்பு வைத்துள்ளனா். இவற்றில் ஒரு மூட்டை கூட கொள்முதல் ஆகி வெளியே செல்லவில்லை.

இதே நிலைதான் மாவட்டத்தில் பிற பகுதிகளான கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கழுகுமலை, கயத்தாறு, எட்டயபுரம் உள்ளிட்ட கிடங்குகளிலும் உள்ளது. மாவட்டம் முழுவதும் சுமாா் 10 லட்சம் டன் வரை நவதானியங்கள் இருப்பு இருக்கும். விவசாயிகள் இப்பிரச்னையை எங்கே யாரிடம் முறையிடுவது என தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே தமிழக அரசு மக்காச்சோளம், வெள்ளை சோளம், கொத்தமல்லி, மிளகாய் வத்தல், கம்பு ஆகியவற்றுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். மானாவாரி பயிா்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை விட கூடுதல் விலை நிா்ணயித்து விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com