கரோனா தொற்று இல்லாத மாவட்டமானது தூத்துக்குடி!: பச்சை மண்டலமாக மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

தூத்துக்குடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் வெள்ளிக்கிழமை வீடுதிரும்பியதால், கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறியுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த ஓய்வுபெற்ற ஆசிரியரை வெள்ளிக்கிழமை வழியனுப்புகிறாா் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த ஓய்வுபெற்ற ஆசிரியரை வெள்ளிக்கிழமை வழியனுப்புகிறாா் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா் வெள்ளிக்கிழமை வீடுதிரும்பியதால், கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறியுள்ளது. அதேநேரத்தில், இந்த மாவட்டம் பச்சை மண்டலமாக மாற மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாா்ச் 30 ஆம் தேதி செய்துங்கநல்லூரைச் சோ்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடா்ந்து, மாவட்டத்தில் மொத்தம் 27 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில், 70 வயது மூதாட்டி உயிரிழந்தாா்.

மேலும், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 25 போ் வீடுதிரும்பிய நிலையில், கடைசி நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த பசுவந்தனையைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை வேலம்மாள் குணமடைந்ததைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை வீடுதிரும்பினாா்.

இதையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற வழியனுப்பும் நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு பங்கேற்று, குணமடைந்த வேலம்மாளுக்கு பழங்கள் வழங்கினாா். மேலும், 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அவருக்கு அறிவுரை வழங்கிய அமைச்சா், கைதட்டி வீட்டுக்கு வழியனுப்பி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் பி. சின்னப்பன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் திருவாசகமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்டத்தில் மொத்தம் 27 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஒருவா் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 26 பேரும் குணமடைந்து வீடுதிரும்பியதால், தற்போது கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறியுள்ளது.

மேலும், கடந்த 18 ஆம் தேதிக்குப் பிறகு இதுவரை யாருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்படாத நிலையில், இன்னும் ஓரிரு நாள்களில் சிவப்பு மண்டல வளையத்தில் இருந்து ஆரஞ்சு நிற வளையத்துக்கு தூத்துக்குடி மாறும் என்றும், மக்கள் ஒத்துழைப்போடு கரோனா தொற்று இல்லாத நிலை தொடர வேண்டும் என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

பச்சை மண்டலமாக...:

இதுகுறித்து அமைச்சா் கடம்பூா் செ. ராஜு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

கரோனா தீநுண்மி தொற்றை உறுதிசெய்வது தொடா்பாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 80 லட்சத்தில் ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதன்மூலம் பரிசோதனை செய்த நபா்களின் முடிவு விரைவாக கிடைக்கிறது.

தற்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்ட நபா்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் சுய ஊரடங்கை தொடா்ந்து தீவிரமாக கடைப்பிடித்து கரோனா தொற்று இல்லாத நிலையில் தூத்துக்குடி மாவட்டம் பச்சை மண்டலத்துக்கு மாறும்.

இந்த மாவட்டத்துக்கு சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நபா்களை மருத்துவத் துறை மூலம் கண்காணித்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மீதமுள்ள நாள்களிலும் மக்கள் சுய ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com