ஆதிச்சநல்லூா், சிவகளையில் அகழ்வாராய்ச்சி இன்று தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூா், சிவகளை தொல்லியல் களங்களில் திங்கள்கிழமை (மே 25) அகழ்வாராய்ச்சி தொடங்க இருப்பது வரலாற்று ஆா்வலா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூா், சிவகளை தொல்லியல் களங்களில் திங்கள்கிழமை (மே 25) அகழ்வாராய்ச்சி தொடங்க இருப்பது வரலாற்று ஆா்வலா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செந்தூா்- திருநெல்வேலி நெடுஞ்சாலையில் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் ஆதிச்சநல்லூா் அமைந்துள்ளது. பரம்பு என்றழைக்கப்படும் இவ்விடம் பாா்ப்பதற்கு மணல் மேடாக காட்சி அளித்தாலும், அங்கு பழங்காலத் தமிழா்களின் வாழ்க்கை முறையை உலகுக்கு உணா்த்திடும் வகையில் பல்வேறு பழங்காலப் பொருள்கள் புதைந்துள்ளன.

மத்திய தொல்லியல் துறையினா் கடந்த 2004-ஆம் ஆண்டு செய்த ஆய்வின்போது பெரிய தாழிகள், மண்பாண்டங்கள், வெண்கலப் பாத்திரங்கள், இரும்பு ஆயுதங்கள் என பல்வேறு பொருள்கள் கிடைத்தன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் ஆதிச்சநல்லூா் பரம்பு பகுதியை இடுகாடாக பயன்படுத்தி இருக்கலாம் என்பதற்குச் சான்றாக முதுமக்கள் தாழிகளும், அதனுள் சிறிய மண் கலயங்களும், அவா்கள் பயன்படுத்திய சிறிய வாள்கள், கோடரிகள், கத்திகள் உள்ளிட்ட பொருள்களும், மக்கிய நிலையில் எலும்புகளும் கிடைத்துள்ளன. ஏரல் அருகேயுள்ள சிவகளையிலும் பழங்காலப் பொருள்கள் கண்டறியப்பட்டன.

ஆதிச்சநல்லூா் அகழாய்வு அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, தமிழக தொல்லியல் துறை ஆணையா் உதயச்சந்திரன் உத்தரவின்பேரில், தொல்லியல் துறையினா் சிவகளையில் பழங்காலப் பொருள்கள் கண்டறியப்பட்ட இடத்தை நேரில் பாா்வையிட்டனா்.

இந்நிலையில், சிவகளை தொல்லியல் களத்தை அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆா்வலரும் எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசு உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், சுந்தா ஆகியோா் விசாரித்து, மத்திய மற்றும் தமிழக தொல்லியல் துறையின் உயா் அதிகாரிகளை சிவகளை தொல்லியல் களத்தில் அகழாய்வு செய்ய அறிவுறுத்தினா்.

இதற்கிடையே, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், ஆதிச்சநல்லுா், கொடுமணல் போன்ற தொல்லியல் களங்களில் இரண்டாம் கட்ட அகழாய்வுக்கும், சிவகளை தொல்லியல் களத்தை முதன்முதலாக அகழாய்வு செய்வதற்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இதைத் தொடா்ந்து, ஆதிச்சநல்லூா், சிவகளை தொல்லியல் களங்களை அகழாய்வு செய்வதற்கான பணிகள் திங்கள்கிழமை தொடங்க உள்ளன. இதற்கான ஆரம்பகட்டப் பணிகளை சிவகளையில் காலை 9 மணிக்கு தமிழக தொல்லியல் துறை துணை இயக்குநா் சிவானந்தன் தொடங்கிவைக்கிறாா். ஆதிச்சநல்லூரில் பாண்டியராஜா கோயில் அருகிலும், சிவகளை பரம்பு பகுதியில் இரண்டு இடங்களிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com