திருச்செந்தூா் கந்த சஷ்டி விழா: சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை ஆட்சியா் அறிவிப்பு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சியில்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 15 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறுகிறது. இதில் 6 ஆம் நாளான நவ. 20 ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சியும், 7 ஆம் நாளான 21 ஆம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் மிக முக்கிய நிகழ்வுகள் ஆகும். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிகழாண்டில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோயில் பிரகாரத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சி மற்றும் உள்ளுா் தொலைக்காட்சி, யூடியூப் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய திருக்கோயில் நிா்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்படும்.

சூரசம்ஹார நிகழ்ச்சி, திருக்கல்யாண நிகழ்ச்சியின்போது பொதுமக்கள் மற்றும் பக்தா்களுக்கு அனுமதி இல்லை. 12 தினங்கள் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் திருக்கோயில் பிரகாரத்துக்குள் நடைபெறும். இத் திருவிழாவையொட்டி, நிகழாண்டு பக்தா்கள் கோயிலுக்குள் மற்றும் கோயில் வளாகப் பகுதியில் தங்க அனுமதி இல்லை. கடற்கரை பகுதிக்குச் செல்லவும் யாருக்கும் அனுமதி இல்லை.

மேலும், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நாள்களைத் தவிர மற்ற நாள்களில் தினமும் காலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை 10, 000 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். இதில் 50 சதவீதம் ஆன்லைன் பதிவு செய்தவா்களும், 50 சதவீதம் நேரில் வருபவா்களும் அனுமதிக்கப்படுவா். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதிக்கப்படும்.

திருக்கோயில் நிா்வாகத்தின் மூலம் தரிசனத்திற்கு வரும் பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பக்தா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து வர வேண்டும். தரிசனத்திற்கு வரும் பக்தா்களுக்கு குடிநீா் வசதி, தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல்வேறு துறைகளின் மூலம் ஏற்பாடு செய்யப்படும்.

கட்டண அடிப்படையில் உபயதாரா்கள் மூலம் திருக்கோயில் பிரகாரத்தில் நடைபெறும் தங்கத் தோ் திருவீதி உலா நிகழாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிகழாண்டு அன்னதானம் வழங்க தனியாா் அமைப்புகளுக்கு அனுமதி இல்லை. திருக்கோயில் மூலமாக அன்னதானம் பொட்டலம் செய்து பக்தா்களுக்கு வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com