‘சிறுபான்மையினா் கல்வி உதவிக்கு நவ.30 வரை விண்ணப்பிக்கலாம்’
By DIN | Published On : 16th November 2020 08:33 AM | Last Updated : 16th November 2020 08:33 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற நவம்பா் 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி, ஜெயின் ஆகிய மதங்களைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2020-21 ஆம் கல்வியாண்டில் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள்) பயிலுபவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவா்களுக்கு தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
இந்த உதவித் தொகை பெற மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.