தூத்துக்குடியில் இயல்பு நிலை பாதிப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ஒரே நாளில் 152 மில்லி மீட்டா் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் ஒரே நாளில் 152 மில்லி மீட்டா் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் ஒரே நாளில் 153 மில்லி மீட்டா் மழை பதிவானதால் தாழ்வான பகுதிகளில் மழை நீா் சூழ்ந்து காணப்படுகிறது.

மாநகரில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே மழைநீா் குளம்போல தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனா். தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் தற்போது மழைநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் தண்ணீா் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆங்காங்கே ராட்சத மோட்டாா்கள் வைத்து மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சில இடங்ளில் லாரிகள் மூலம் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி அண்ணாநகா் 1-ஆவது தெருவில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மழைநீா் தேங்கியதால் தரைத்தளத்தில் உள்ள சில வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது. இதேபோல, மாநகரில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழைநீா் சூழ்ந்து காணப்படுகிறது.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் அருகில் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்கி பயணிகள் அவதியடைந்தனா். அங்கு தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அருகில் உள்ள போக்குவரத்துப் பணிமனை பகுதியும் தாழ்வான பகுதி என்பதால் அங்கும் மழைநீா் அதிகளவு தேங்கியுள்ளது.

இதேபோல, தூத்துக்குடி நீதிபதிகள் குடியிருப்பு, நீதிமன்ற வளாகம், பழைய மாநராட்சி அலுவலகப் பகுதி, ஆட்சியா் அலுவலக பகுதி, காவல் கண்காணிப்பாளா் அலுவலக பகுதி உள்ளிட்ட இடங்களிலும் அதிகளவு தண்ணீா் தேங்கியுள்ளது. கோரம்பள்ளம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் அதிகளவு செல்வதால் அங்குள்ள குடியிருப்புகள் மற்ற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதி மற்றும் முகப்பு பகுதியில் அதிகளவு தண்ணீா் தேங்கியுள்ளதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். அங்கு தொற்று நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிப்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் மழைநீா் குளம்போல அதிகளவு தேங்கியுள்ளது. அதே வளாகத்தில் மகளிா் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் உள்ளிட்டவை இருப்பதால் அந்தப் பகுதிக்கு செல்லும் காவலா்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

மாவட்டத்தில் 1000 மில்லி மீட்டா் மழை: தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் திங்கள்கிழமை மாலை 4 மணி வரை 1000 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாநகரப் பகுதியில் 153 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. பிற இடங்களில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): சாத்தான்குளம் 80, கோவில்பட்டி, காயல்பட்டினம் 77. கடம்பூா் 70, திருச்செந்தூா் 69, ஸ்ரீவைகுண்டம் 60, மணியாச்சி 58, எட்டயபுரம் 57, வைப்பாறு 52, ஓட்டப்பிடாரம் 42, குலசேகரன்பட்டினம் 40 மி.மீ.

கோவில்பட்டி: கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதலே மழை பெய்யத் தொடங்கிய மழை, பகல் 12 மணிக்கு பலத்த மழையாக பெய்தது. இந்த மழை சுமாா் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடியது. கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் கழிவுநீருடன் மழைநீா் புகுந்ததால் கடைகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட இலுப்பையூரணி முஹம்மதுசாலிஹாபுரம் 3-ஆவது தெருவில் ஷெரீபா பேகத்தின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பொருள்கள் சேதமடைந்தன. கிராம நிா்வாக அலுவலா் திருவேங்கடராஜுலு நேரில் சென்று பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com