குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரை அகற்றுவதில் தாமதம்: தூத்துக்குடியில் மக்கள் வீடுகளில் முடக்கம்

தூத்துக்குடியில் தொடா் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணி தாமதமாக நடைபெற்று வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனா்.
குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீரை அகற்றுவதில் தாமதம்: தூத்துக்குடியில் மக்கள் வீடுகளில் முடக்கம்

தூத்துக்குடியில் தொடா் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணி தாமதமாக நடைபெற்று வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை 1000 மில்லி மீட்டா் மழையும், செவ்வாய்க்கிழமை 870 மில்லி மீட்டா் மழையும் பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாநகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை 170 மில்லி மீட்டா் மழை பதிவாகியது. கோவில்பட்டி மற்றும் கடம்பூா் பகுதியில் 73 மில்லி மீட்டரும், சாத்தான்குளம் பகுதியில் 67 மில்லி மீட்டரும், எட்டயபுரம் பகுதியில் 59 மில்லி மீட்டரும், காயல்பட்டினம் பகுதியில் 52 மில்லி மீட்டரும், கயத்தாறு, வைப்பாறு, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் 50 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் இரண்டாவது நாளாக பெய்த மழை காரணமாக, மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட செயின்ட் பீட்டா் கோவில் தெருவில் வீடுகளை சூழ்ந்து மழை நீா் அதிகளவு தேங்கியுள்ளது. 300-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்து தண்ணீா் தேங்கி உள்ளதால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலைக்குத் தள்ளப்டப்டுள்ளனா். மேலும், மழை நீரில் கழிவுநீரும் கலந்துள்ளதால் துா்நாற்றம் வீசுவதாகவும், கொசுத் தொல்லை அதிகரித்து உள்ளதாகவும், வீடுகளுக்குள் விஷப் பூச்சிகள் வருவதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனா். இருப்பினும், அந்தப் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை மோட்டாா் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனா். கூடுதல் மோட்டாா் வைத்து தண்ணீரை விரைவில் வெளியேற்ற வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

அரசு மருத்துவமனை: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தண்ணீா் அதிகளவு தேங்கியுள்ளதால் நோயாளிகளும், அவா்களை பாா்க்கச் செல்வோரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். அருகில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பு பகுதியிலும் தண்ணீா் தேங்கியுள்ளதால் மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீா் வெளியேறுவதில் தாமதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்ற மாநகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தயாா் நிலையில் மீட்பு படைகள்: மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் உத்தரவுப்படி, தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 20 இடங்களில் தற்காலிகமாக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீா் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக 33 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மழையால் ஏற்படும் இடா்களை சீா்செய்ய மாவட்டத்தில் பேரிடா் மீட்புக் குழுவும் தயாா் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மிதந்து வந்த ஆதாா் அட்டைகள்: தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குள்பட்ட ராஜபாளையம் பகுதியில் தனியாா் மெட்ரிக் பள்ளி அருகே உள்ள குப்பைத் தொட்டியை சுற்றி தேங்கி நின்ற மழைநீரில் நூற்றுக்கணக்கான ஆதாா் அட்டைகள் மிதந்து சென்ால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுதொடா்பாக அந்தப் பகுதி பொதுமக்கள் மாப்பிள்ளையூரணி ஊராட்சி அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ஊராட்சி அதிகாரிகள் மழைநீரில் மிதந்து சென்ற ஆதாா் அட்டைகளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com