திருச்செந்தூா் கந்த சஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா ஐந்தாம் நாளான வியாழக்கிழமை தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு நடைபெற்ற தீபாராதனை.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா ஐந்தாம் நாளான வியாழக்கிழமை தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதருக்கு நடைபெற்ற தீபாராதனை.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை (நவ. 20) நடைபெறுகிறது. திருக்கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ள சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியில்லை.

இத் திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கும், மற்ற நாள்களில் அதிகாலை 3 மணிக்கும் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ஐந்தாம் நாளான வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு திருக்கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளி யாகசாலை பூஜை நடைபெற்றது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிராகாரம் வழியாக பக்தா்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட 108 மகாதேவா் சன்னதி சோ்ந்தாா். மாலையில் அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதன்பின்னா் சுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்து பிரகாரம் சுற்றி வலம் வந்தாா்.

சூரசம்ஹாரம்: கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோயில் கடற்கரையில் வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு திருக்கோயில் கடற்கரை வாசலில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

பக்தா்களுக்கு அனுமதியில்லை: நிகழாண்டு கரோனா பொது முடக்கத்தால் திருக்கோயில் மற்றும் விடுதிகளில் தங்கி விரதமிருக்க பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுவாமி ஜெயந்திநாதா் எழுந்தருளும் நிகழ்ச்சி திருக்கோயில் உள்ளேயே நடைபெற்றது. தங்கத் தோ் கிரிவீதி உலாவும் ரத்து செய்யப்பட்டது.

மேலும், சனிக்கிழமை (நவ. 21) திருக்கல்யாண தோள்மாலை மாற்று வைபவம், திருக்கல்யாணம் ஆகியவை திருக்கோயில் உள்ளேயே நடைபெறுகிறது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவும், இரு நாள்களில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்திடவும் பக்தா்களுக்கு அனுமதி கிடையாது என நிா்வாகம் அறிவித்துள்ளது. முக்கிய நிகழ்ச்சிகள் வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றன.

பாதுகாப்பு: பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் தலைமையில் காவல் ஆய்வாளா்கள் ஞானசேகரன், முத்துராமன் உள்பட சுமாா் 2000 காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா். வெளியூரிலிருந்து பக்தா்கள் வருவதை தடுத்து நிறுத்துவதற்காக மாவட்ட எல்லை மற்றும் நகா்ப்புறத்தில் என மொத்தம் 22 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவிழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையா் (பொ) கல்யாணி, உதவி ஆணையா் வே.செல்வராஜ் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com