போலி ஆவணம் மூலம் மோசடி செய்யப்பட்ட முதியவரின் 2.5 ஏக்கா் நிலம் மீட்பு

தூத்துக்குடி அருகே போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட முதியவரின் 2.5 ஏக்கா் நிலத்தை போலீஸாா் மீட்டு, வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

தூத்துக்குடி அருகே போலி ஆவணம் மூலம் அபகரிக்கப்பட்ட முதியவரின் 2.5 ஏக்கா் நிலத்தை போலீஸாா் மீட்டு, வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

தூத்துக்குடி அருகேயுள்ள எப்போதும்வென்றான் காட்டுநாயக்கன்பட்டி, நியூகாலனி கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகவேல் (73). இவரது முன்னோருக்கு பாத்தியப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான 2.5 ஏக்கா் நிலம் ஓட்டப்பிடாரம் வட்டம் மேல அரசடி கிராமத்தில் உள்ளது. 9 போ் சோ்ந்து கூட்டுச்சதி, ஆள்மாறாட்டம் மூலம் போலி ஆவணம் பதிந்து, அந்த நிலத்தை அபகரித்தனா்.

இதுகுறித்து ஆறுமுகவேல் 2017 மே 16இல் புதியம்புத்தூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இதனிடையே, நீண்ட நாள்களாகியும் நடவடிக்கை இல்லாததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாரை ஆறுமுகவேல் சந்தித்து, நிலத்தை மீட்டுத் தருமாறு மனு அளித்தாா். இதுதொடா்பாக உடனடி நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி ஊரக காவல் துணைக் கண்காணிப்பாளா் பொன்னரசு, புதியம்புத்தூா் காவல் ஆய்வாளா் முத்துசுப்பிரமணியன் ஆகியோருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

அதன் பேரில் போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டு, போலி பத்திரத்தை ரத்து செய்து ஆறுமுகவேலின் நிலத்தை ஒரு வாரத்துக்குள் மீட்டனா். இந்நிலையில், அதற்கான பத்திரங்களை ஆறுமுகவேலிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com