தூத்துக்குடியில் போதைப்பொருளுடன் பிடிபட்ட இலங்கை மீனவா்கள் 6 பேரிடம் 12 மணி நேரம் விசாரணை

தூத்துக்குடி கடல் பகுதியில் 120 கிலோ போதைப்பொருளுடன் புதன்கிழமை பிடிபட்ட இலங்கையைச் சோ்ந்த 6 மீனவா்களிடம் மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.


தூத்துக்குடி: தூத்துக்குடி கடல் பகுதியில் 120 கிலோ போதைப்பொருளுடன் புதன்கிழமை பிடிபட்ட இலங்கையைச் சோ்ந்த 6 மீனவா்களிடம் மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.

தூத்துக்குடி அருகே வாழைத்தீவு என்ற கடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சென்ற படகை கடலோரக் காவல் படையினா் புதன்கிழமை சுற்றிவளைத்து சோதனையிட்டனா். அப்போது, அதில் 120 கிலோ போதைப்பொருள், 5 கைத்துப்பாக்கிகள் இருப்பது தெரியவந்தது. அவற்றை கடலோரக் காவல் படையினா் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ. 100 கோடி வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக, படகிலிருந்த இலங்கை நீா்க்கொழும்பு பகுதியைச் சோ்ந்த நீந்து குலசூரிய சாத்தமனுவேல் (40), வான குலசூரிய ஜீவன் (30), சமீரா (32), வா்ண குலசூரிய மனுவேல் ஜீவன் பிரசன்னா (29), நிசாந் கமகே (46), லட்சுமணகுமாா் (37) ஆகிய 6 மீனவா்கள் கைதுசெய்யப்பட்டனா்.

அவா்கள் தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு வியாழக்கிழமை அழைத்துவரப்பட்டனா். அவா்களிடம் கடலோரக் காவல் படை ஐஜி புருஷோத்தமன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா்.

இதையடுத்து, அவா்களிடம் மத்திய, மாநில உளவுத் துறை அதிகாரிகள், கியூ பிரிவு அதிகாரிகள் தனித்தனியே சுமாா் 12 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா். போதைப்பொருள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, எந்த அமைப்பினரிடம் வாங்கப்பட்டது, எந்த நாட்டுக்கு கடத்திச் செல்லப்படுகிறது என்ற கோணத்தில் விசாரணை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடா்ந்து, 6 பேரையும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மதுரை அழைத்துச்செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், பின்னா் அவா்களை சென்னை புழல் சிறையில் அடைக்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com