விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 01st October 2020 08:04 AM | Last Updated : 01st October 2020 08:04 AM | அ+அ அ- |

குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
விளாத்திகுளம் அருகேயுள்ள மாமூநயினாா்புரம் காலனியில் வசித்து வருவோா் குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் வழங்க வேண்டும்; அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா். எனினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இந்நிலையில் கிராம மக்கள் புதன்கிழமை விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திரண்டு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாச் செயலா் புவிராஜ் தலைமையில் கிராம மக்கள் கலந்து கொண்டனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் தங்கவேலுவிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
இதுதொடா்பாக, ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் தீா்வு காணப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். கோரிக்கையை நிறைவேற்றாவிடில் அக். 14 ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்தனா்.