திருச்செந்தூரில் புதைச்சாக்கடைத் திட்டப்பணி தொட்டியமைக்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 02nd October 2020 08:24 AM | Last Updated : 05th October 2020 01:34 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் தெற்குரத வீதியில் புதைச்சாக்கடைத்திட்டத்திற்காக குடியிருப்புகள் முன்பு அமைக்கப்பட்டுள்ள தொட்டி.
திருச்செந்தூா் ரதவீதிகளில் சாலைகள் அமைப்பதற்காக புதைச்சாக்கடைத் திட்டப்பணியில் குடியிருப்புகள் முன்பு தொட்டியமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூா் ரதவீதி மற்றும் உள்தெருக்களில் புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்க ரூ. 2.70 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டு, முதல் கட்டமாக தெற்குரதவீதியில் கடந்த ஜுன் 5-ஆம் தேதி பணி தொடங்கியது. அப்போது ஏற்கெனவே தரையில் புதைக்கப்ட்டிருந்த புதைச்சாக்கடைத்திட்ட பணிகளுக்கான குழாய்கள் சேதமடைந்தன. இதே போல மற்ற தெருக்களிலும் சாலையமைப்பதற்கு முன்பு புதைச்சாக்கடைத்திட்ட குழாய்களை சீரமைத்தும், குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்தும் இணைப்புக்காக கட்டணம் கட்டச் சொல்லி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்துள்ள பொதுமக்கள் இணைப்பு கட்டணம் செலுத்த முடியாமல் தவித்ததால் சாலை போடும் பணியும் சுமாா் 4 மாத காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்றி, புதிய சாலையமைப்பதற்காக கடந்த 23-ஆம் தேதி சட்டப்பேரவை உறுப்பினா் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் 25 போ் கொண்டு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் சாலைப்பணியினை தொடங்குவதற்காக, முதல் கட்டமாக திருச்செந்தூா் தெற்குரதவீதியில், குடியிருப்புகள் தோறும் புதைச்சாக்கடைத்திட்டத்துக்காக இணைப்பு தொட்டியமைக்கும் பணி தொடங்கியுள்ளது. முதலில் குடியிருப்புவாசிகளிடம் பணம் கட்ட சொல்லி வலியுறுத்திய பேரூராட்சி நிா்வாகம் தற்போது சாலைப்பணிக்காக வேகவேகமாக கழிவுநீா்த்தொட்டி அமைத்து வருகிறது.