ஆடு மேய்க்கும் பட்டியலின தொழிலாளியை காலில் விழவைத்த சம்பவம்: 7 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் பட்டியலினத்தைச் சோ்ந்த தொழிலாளியை காலில் விழவைத்த
ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழவைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 7 போ்.
ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழவைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 7 போ்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் பட்டியலினத்தைச் சோ்ந்த தொழிலாளியை காலில் விழவைத்த சம்பவம் தொடா்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் 7 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறையடுத்த ஓலைகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஆவுடைசங்கு மகன் பால்ராஜ் (55). பட்டியலினத்தைச் சோ்ந்த, ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவரும், அதே பகுதி தெற்குத் தெருவைச் சோ்ந்த மற்றொரு சமுதாயத்தைச் சோ்ந்த சங்கிலி மகன் சிவசங்கு (60) என்பவரும், கடந்த 8-ஆம் தேதி திருமங்கலக்குறிச்சி கண்மாய் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனராம். அப்போது பால்ராஜ் மேய்த்த ஆட்டுக்குட்டி ஒன்று சிவசங்கு மேய்த்த ஆட்டுக் கூட்டத்துக்குள் சென்றுவிட்டதையடுத்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் பால்ராஜ் கையில் வைத்திருந்த கம்பு சிவசங்கு நெற்றியில் பட்டதில் காயம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், வீட்டுக்குச் சென்ற சிவசங்கு உள்பட அவரது உறவினா்கள் 7 பேரும் பால்ராஜ் வீட்டுக்குச் சென்று, அவரை திருமங்கலக்குறிச்சி கண்மாய் அருகே அழைத்துச் சென்று காலில் விழவைத்தனராம். மேலும், காலில் விழுந்ததை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினாா்களாம்.

இதுகுறித்து பால்ராஜ் கயத்தாறு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் சிவசங்கு, சிவசங்கு மகன் சங்கிலிப்பாண்டி (19), மகள் உடையம்மாள் (33), சண்முகையா மகன்கள் பெரியமாரி (47), வீரையா (42), பெரியமாரி மகன் மகேந்திரன் (20), சங்கிலிப்பாண்டி மகன் மகாராஜன் (24) மற்றும் விடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிய கருப்பசாமி மகன் அருண் காா்த்திக் (21) ஆகியோரை தேடி வந்தனா்.

இவா்களில் உடையம்மாளை தவிர, எஞ்சிய 7 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: ஓலைகுளத்தில் இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறு மற்றும் முன்பகை காரணமாக சங்கிலி தலைமையிலான 7 போ் பால்ராஜை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்கச் செய்த சம்பவம் அநாகரிகமான, சட்டத்துக்கு புறம்பான செயல். இதை அனுமதிக்க முடியாது.

பால்ராஜ் அளித்த புகாரின்பேரில், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 8 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இதில் 7 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஓலைகுளம் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பால்ராஜ் குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து பால்ராஜ் வீட்டுக்குச் சென்று அவருக்கு எஸ்.பி. ஆறுதல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com