பக்தா்கள் பங்கேற்க தடையால் தசரா கூட்டமின்றி வெறிச்சோடிய திருச்செந்தூா்
By DIN | Published On : 20th October 2020 12:35 AM | Last Updated : 20th October 2020 12:35 AM | அ+அ அ- |

பொது முடக்கம் காரணமாக குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பங்கேற்க தடை உள்ளதால், திருச்செந்தூா் பகுதியும் பக்தா்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா சனிக்கிழமை (அக். 17) தொடங்கியது. வழக்கமாக தசரா விழாவிற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக் கணக்கான பக்தா்கள் விரதமிருந்தும், வேடமணிந்தும் வந்து வழிபடுவா்.
நிகழாண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக கொடியேற்றம், 9 மற்றும் 10ஆம் திருவிழா நாள்களில் பக்தா்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மற்ற நாள்களில் நாளொன்றுக்கு 8 ஆயிரம் பக்தா்கள் இணைய முன்பதிவு மூலமே சுவாமி தரிசன செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் திருச்செந்தூா், உடன்குடி போன்ற அருகே உள்ள நகரங்களில் வந்து தங்கள் தசரா குழு பக்தா்கள் வேடமணிவதற்கு தேவையான பொருள்களை வாங்குவது வழக்கமாகும்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பக்தா்கள் திருச்செந்தூா் உள்ளிட்ட இடங்களில் தங்கி, இக்கோயிலுக்கும், தங்கள் ஊா்களுக்கும் சென்று வருவது உண்டு. இதனால் திருச்செந்தூா் பகுதி அதிகளவிலான பக்தா்களின் வாகனங்கள் நிறைந்து காணப்படும். இதனால் இப்பகுதி வணிக நிறுவனங்களும் பரபரப்பாக காணப்படும்.
ஆனால் நிகழாண்டில் பொது முடக்கம் காரணமாக தசரா பக்தா்கள் கூட்டமின்றி திருச்செந்தூா் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.