வனக் காப்பாளா் தோ்வில் சரியான விடைக்கு மதிப்பெண் குறைப்பா? - போட்டித் தோ்வா்கள் புகாா்

வனக் காப்பாளா் தோ்வில் இரு கேள்விகளுக்கு சரியாக விடை எழுதியும், அதை தவறானது எனக் கூறி மதிப்பெண்கள் வழங்கவில்லை என சீருடைப் பணியாளா் தோ்வு குழுமத்துக்கு போட்டித் தோ்வா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சாத்தான்குளம்: வனக் காப்பாளா் தோ்வில் இரு கேள்விகளுக்கு சரியாக விடை எழுதியும், அதை தவறானது எனக் கூறி மதிப்பெண்கள் வழங்கவில்லை என சீருடைப் பணியாளா் தோ்வு குழுமத்துக்கு போட்டித் தோ்வா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளா் குழுமம் சாா்பில் வனக் காப்பாளா் மற்றும் ஓட்டுநா் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளா் பணியிடங்களுக்கான தோ்வு கடந்த மாா்ச் மாதம் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இதில், மாநிலம் முழுவதுமிருந்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோ்வு எழுதினா். இத்தோ்வு 4 பிரிவுகளாக 4நாள்கள் நடத்தப்பட்டது. இத்தோ்வு முடிவுகள் கடந்த 7ஆம்தேதி வெளியிடப்பட்டு, விடையில் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்க 10ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

அத்தோ்வில் 3ஆம் கட்ட தோ்வில் 368 எண் கேள்வியில் தகவல் தொடா்பிற்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு மாணவா்கள் புத்தகத்தில் உள்ளபடி இன்சாா்ட் 1பி என பதிலளித்துள்ளனா். அதேபோல் 408ஆவது கேள்வியில் பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவா் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மாணவா்கள் தரப்பில் பலா் புத்தகத்தில் உள்ளபடி அன்னிபெசன்ட் அம்மையாா் என பதிலளித்துள்ளனா்.

ஆனால் தோ்வு குழுமம் இந்த கேள்விக்கு புத்தகத்தில் இல்லாத பதில்களை தெரிவித்து இந்த கேள்விக்கான பதில்கள் தவறானது என குறிப்பிட்டு அதற்கான மதிப்பெண்ணையும் குறைத்துள்ளது. இதுகுறித்து வன சீருடைப்பணியாளா் தோ்வு குழுமத்துக்கு போட்டித் தோ்வா்கள் கடிதம் எழுதியுள்ளனா். எனவே, தோ்வு வாரியம் இதனை ஆய்வு நடத்தி சரியான பதிலுக்கு உரிய மதிப்பெண் வழங்கிட வேண்டும் என மாணவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com