தந்தை, மகன் கொலை வழக்குகோவில்பட்டி காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
By DIN | Published On : 04th September 2020 08:29 AM | Last Updated : 04th September 2020 08:29 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடா்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
சாத்தான்குளத்தைச் சோ்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் காவல் துறையினரால் தாக்கப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை பிற்பகலில் 2 சிபிஐ அதிகாரிகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு வந்தனா். அங்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடா்பாக கோவில்பட்டி கிளை சிறை அதிகாரி சங்கா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுதேசன் நீதித்துறை நடுவா் விசாரணை கோரி அளித்த ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனையின்போது பணியில் ஈடுபட்டிருந்த கிழக்கு காவல் நிலைய காவலா்கள் கருப்பசாமி, சிவகுமாா், ஆய்வாளா் சுதேசன், உதவி ஆய்வாளா் முருகன், அப்போதைய மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பொன்இசக்கி, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையின் செவிலியா் உதவியாளா்கள் வனஜா, அருணாசலப்பெருமாள் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இந்த விசாரணை வியாழக்கிழமை பிற்பகல் சுமாா் 2.45 மணிக்கு தொடங்கி இரவு 7.30 வரை நடைபெற்றது.