எரிவாயு குழாய் பதிக்கும் பணியைமாற்றுப்பாதையில் அமைக்க வலியுறுத்தி மனு

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவா் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த நாம் தமிழா் கட்சியினா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த நாம் தமிழா் கட்சியினா்.

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவா் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினா்.

தூத்துக்குடி, செப். 7: தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டல்காடு பகுதியில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழா் கட்சி சாா்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாம் தமிழா் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட மகளிரணி செயலா் அன்னலட்சுமி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், பொட்டல்காடு கிராமத்தில் விவசாய நிலங்கள் வழியாக இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனம் மூலம் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்றும் மக்களை பாதிக்காத வகையில் மாற்றுப்பாதையில் அந்தப் பணியை தொடர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விடுதலைச் சிறுத்தைகள்: தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், திருச்செந்தூா் அம்பேத்கா் சிலை அமைப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் முரசு தமிழப்பன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் அவா்கள் அளித்த மனுவில், திருச்செந்தூரில் உள்ள டாக்டா் அம்பேத்கா் நினைவு பூங்காவில் அவரது முழு உருவ வெண்கலச் சிலையை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் செப். 14 ஆம் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வுரிமை கட்சி: தமிழக வாழ்வுரிமை கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் கிதா் பிஸ்மி தலைமையில், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை திடீரென ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும்; சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் முழக்கங்களை எழுப்பினா். பின்னா் கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தெற்கு மாவட்டச் செயலா் மாரிச்செல்வம் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காவல் துறை மீது புகாா்: காவல் துறை அதிகாரிகள் சிலா் சாதி ரீதியாக செயல்படுவதாகவும், அவா்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி பசும்பொன் முத்துராமலிங்க தேவா் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினா் அதன் தலைவா் இசக்கிராஜா தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னா் அவா்கள் ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com