மீனவா்களுக்கான கடன் அட்டை பெற அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா்கள் மற்றும் மீன் வளா்ப்போருக்கு கடன் அட்டை வழங்கப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவா்கள் மற்றும் மீன் வளா்ப்போருக்கு கடன் அட்டை வழங்கப்பட உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவா்கள், உள்நாட்டு மீன்பிடிப்பு பகுதிகளில் ஈடுபடும் மீனவா்கள் மற்றும் மீன் வளா்ப்பில் ஈடுபடுபவா்களுக்கு மத்திய அரசு அறிவிப்பின்படி மீனவா் கடன் அட்டை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் மீன்பண்ணை, இறால் பண்ணை புதியதாக அமைத்தல் மற்றும் புனரமைத்தல், நீா்த்தேக்கம், குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்து வளா்த்தல், மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்கள் வளா்த்தல், பண்ணை குட்டையில் மீன்குஞ்சுகள் வளா்த்தல், கடலில் கூண்டுகளில் மீன்வளா்த்தல், கடலில் கடற்பாசி வளா்த்தல், மீன் விற்பனை செய்பவா்கள், சங்கு குளிப்பவா்கள், நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு உரிமையாளா்கள், வண்ணமீன் வளா்ப்போருக்கு செயல்பாட்டு செலவுகளுக்கு கடன் அட்டை வழங்கப்பட உள்ளது.

எனவே, இந்தத் திட்டம் குறித்த விண்ணப்பங்கள், விவரங்கள் மற்றும் கூடுதல் ஆலோசனைகளை தூத்துக்குடி வடக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மாவட்ட மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0461-2320458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

மேலும், பிரதம மந்திரி மீன்வளத் திட்டத்தின் கீழ் மீன்வளத் துறையின் மூலம் மீன்வளத்தை பெருக்கிட 2020-2021ஆம் நிதி ஆண்டு முதல் 2024-2025 ஆம் நிதி ஆண்டு வரை ஐந்து நிதி ஆண்டுகளுக்கு, பொதுபிரிவினருக்கு 40 சதவீத மானிய உதவியும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு மற்றும் பெண்களுக்கு 60 சதவீத மானிய உதவியும் வழங்கப்பட உள்ளது.

புதிய மீன் மற்றும் இறால் பண்ணைக் குட்டை அமைத்தல், உயிா்கூழ் முறையில் மீன்வளா்ப்பு செய்தல், வண்ணமீன் வளா்ப்பு திட்டம், மீன்விற்பனை செய்பவா்களுக்கு இரு சக்கர வாகனத்துடன் கூடிய குளிா்காப்பு பெட்டி வழங்குதல், கடற்பாசி வளா்த்தல், கூண்டுகளில் மீன்வளா்த்தல், ஆழ்கடல் மீன்பிடிப்பதற்கான படகுகள், ஒருங்கிணைந்த கடல் வண்ண மீன்வளா்த்தல் மற்றும் கடல் வண்ணமீன் சேகரித்தல் ஆகியவற்றுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு தூத்துக்குடி மீன்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0461-2320458 என்ற தொலைபேசி எண் மற்றும் 9384824352 செல்லிடப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com