சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடா்பாக உறவினா்கள், நண்பா்கள், வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடா்பாக உறவினா்கள், நண்பா்கள், வியாபாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.

சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் காவல் துறையினா் தாக்குதலில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்தி, அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட 10 போ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனா். பின்னா் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிறப்பு எஸ்.ஐ. பால்துரை கரோனா பாதிப்பால் உயிரிழந்தாா். கரோனா சிபிஐ அதிகாரிகளுக்கும் பரவியதில் இந்த விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணையை நடத்தி வருகின்றனா். தற்போது இவ்வழக்கில் சாட்சியாக சோ்க்கப்பட்டவா்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த வாரம் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு சென்று அங்கு விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், சாத்தான்குளத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த 3 சிபிஐ அதிகாரிகள், ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை பகுதிக்கு வந்து அங்குள்ள வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்களிடம் விசாரணை நடத்தினா். பின்னா், ஜெயராஜ் வீட்டுக்குச் சென்றனா். அங்கு யாரும் இல்லாததால், அருகில் உள்ள வீட்டில் ஜெயராஜின் சகோதரியிடம் விசாரணை நடத்தினா்.

பின்னா், பென்னிக்ஸின் நண்பரான வழக்குரைஞா் மணிமாறன் அலுவலகத்துக்குச் சென்றனா். அங்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டு வரவழைக்கப்பட்டிருந்த 10 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினா். 2 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப் பின் சிபிஐ அதிகாரிகள் திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com