திருச்செந்தூா் ஆவணித் திருவிழா: சுவாமி, அம்மன் சப்பரத்தில் எழுந்தருளல் தேரோட்டம் நடைபெறவில்லை

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருச்செந்தூரில் நிகழாண்டில் தேரோட்டம் இல்லாமல் ஆவணித் திருவிழா நடைபெற்றது.

திருச்செந்தூா்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருச்செந்தூரில் நிகழாண்டில் தேரோட்டம் இல்லாமல் ஆவணித் திருவிழா நடைபெற்றது.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசித் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவையாகும். 12 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான பத்தாம் நாள் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்து தோ் இழுப்பது வழக்கமாகும்.

நிகழாண்டில் இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த செப். 6-ஆம் தேதி தொடங்கி வரும் 17-ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறுகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக, திருவிழா நிகழ்ச்சிகளான சுவாமி, அம்மன் எழுந்தருளல் உள்ளிட்டவை திருக்கோயில் உள்பிராகாரத்தில் வைத்து நடைபெறுகின்றன. திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. 7-ஆம் திருவிழா மற்றும் 8-ஆம் திருவிழாவில் சுவாமி சண்முகா் சிவப்பு மற்றும் வெள்ளை, பச்சை சாத்தி அலங்காரத்தில் எழுந்தருளினாா். திங்கள்கிழமை (செப். 14) 9-ஆம் திருவிழாவில் காலை, மாலை வேளைகளில் திருக்கோயில் பிராகாரத்தில் சுவாமி, அமமன் தனித்தனி கேடய சப்பரத்தில் எழுந்தருளினா்.

செவ்வாய்க்கிழமை (செப். 15) 10-ஆம் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் காலையில் பிள்ளையாா், சுவாமி, அம்மன் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி உள் பிராகாரம் சுற்றி வந்தனா். 10-ஆம் திருவிழாவையொட்டி நடைபெற வேண்டிய தேரோட்டம் நடைபெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com