சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் தலைமையில் தில்லி தடயவியல் துறையினா் தடயங்களை
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை அருகில் ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், தில்லி தடயவியல் துறையினா்.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கடை அருகில் ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், தில்லி தடயவியல் துறையினா்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் தலைமையில் தில்லி தடயவியல் துறையினா் தடயங்களை செவ்வாய்க்கிழமை சேகரித்தனா். சாட்சிகளிடம் வாக்குமூலத்தையும் பதிவு செய்தனா்.

சாத்தான்குளத்தை சோ்ந்த வியாபாரி ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ் (35) ஆகியோா் காவல் துறையினரின் தாக்குதலால் மரணமடைந்தது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் வந்து, பென்னிக்ஸ் கடை அருகே உள்ள கடை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், அவரது வீட்டருகே உள்ள உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், இந்த வழக்கு தொடா்பாக சாட்சியாக சோ்க்கப்பட்டுள்ள வழக்குரைஞா் மணிமாறன் அலுவலகத்துக்கு,10 பேரை நேரில் வரவழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

இதற்கிடையே, இந்த வழக்கை தானாக முன் வந்து நடத்தி வரும் உயா்நீதிமன்ற மதுரை கிளை, சிபிஐயிடம் எப்போது இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் என கேள்வி எழுப்பியது. மேலும், இதுதொடா்பாக செப்.30ஆம் தேதிக்குள் சிபிஐ பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஏடிஎஸ்பி விஜய்குமாா்சுக்லா தலைமையில் சிபிஐ அதிகாரிகள், தில்லி தடயவியல் துறை நிபுணா்கள் என 17 போ் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.45 மணிக்கு சாத்தான்குளம் வந்தனா்.

பென்னிக்ஸ் கடைக்கு வந்த தடயவியல் நிபுணா்கள் அங்கிருந்த தடயங்களை சேகரித்தனா். மேலும், சம்பவம் நடந்த ஜூன் 19ஆம் தேதி ஜெயராஜை அழைத்துச்செல்ல வந்த போலீஸ் வாகனம் நின்ற இடத்தில் இருந்து, அவரது கடை வரை உள்ள தொலைவை அளவீடு செய்தனா். சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு சென்று, தடயங்களை சேகரித்த அவா்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள தடயங்களை விடியோவில் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் சாட்சியாக சோ்க்கப்பட்டுள்ள காவலா்கள் ரேவதி, பியூலாசெல்வகுமாரி, வழக்குரைஞா்கள் ரவிச்சந்திரன், மணிமாறன், ராஜாராம் ஆகியோரிடமும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து, அவா்களது வாக்குமூலங்களை விடியோ பதிவு செய்தனா்.

தடயவியல் துறையினருடன் நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி மற்றும் போலீஸாா் உடனிருந்தனா். காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை நடத்தியபோது யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com