கொடுஞ்செயல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றக் கோரி நூதனப் போராட்டம்
By DIN | Published On : 29th September 2020 05:35 PM | Last Updated : 29th September 2020 05:35 PM | அ+அ அ- |

கோவில்பட்டி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி உள்பட கொடுஞ்செயல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் உள்பட கொடுஞ்செயல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற கொலைக் குற்றவாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கும் அரசு ராஜீவ்காந்தியுடன் இறந்த குடும்பங்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை.
எனவே, ராஜீவ்காந்தியுடன் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 கோடி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் நடைபெற்ற படுகொலைகள் குறித்து ஆண்டு வாரியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோருக்கு அளித்துள்ள 72 மற்றும் 161 அரசியல் அமைப்பு விதிகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை உடனே கூட்டி சிறப்பு தீர்மானம் மூலம் மறைந்த பிரதமர் ராஜீவ் படுகொலையில் தொடர்பான குற்றவாளிகளை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும். பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் துணைத் தலைவர் வழக்குரைஞர் அய்யலுசாமி, மாவட்டப் பொதுசெயலர் முத்து, சேவா தளத்தைச் சேர்ந்த சக்திவிநாயகம் மற்றும் நகர காங்கிரஸ் தலைவர் சண்முகராஜ் ஆகியோர் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குக் கயிறு மாட்டிக்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் கோரிக்கை மனுவை கோட்டாட்சியர் விஜயாவிடம் அளித்தனர்.