முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
திருச்செந்தூரில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வியாபாரிகள் முற்றுகை
By DIN | Published On : 04th April 2021 01:46 AM | Last Updated : 04th April 2021 01:46 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் ரதவீதி சாலைகைளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, வியாபாரிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டனா்.
திருச்செந்தூரில் தெற்கு ரதவீதி, கீழ ரதவீதி, வடக்கு ரதவீதி மற்றும் உள்தெருக்களை சீரமைக்க கடந்த ஓராண்டுக்கு முன்பாக ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி தொடங்கப்பட்டது. பின்னா் புதைச்சாக்கடைத் திட்டப் பணியால் கிடப்பில் போடப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் தெற்கு ரதவீதியில் புதிய சாலையமைக்கப்பட்டது.
தற்போது கீழரத வீதி சாலை முழுவதும் தோண்டப்பட்டுள்ளது. அந்தச் சாலைப்பணி தொடங்கப்படும் முன்னரே வடக்கு ரதவீதி சாலை தோண்டப்படுவதாக கூறப்பட்டது.
இவ்விரு ரதவீதிகளும் அதிகளவிலான வணிக நிறுவனங்கள் உள்ளதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். எனவே இவ்விரு சாலைகளையும் உடனடியாக சீரமைத்து, போக்குவரத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் ரெ.காமராசு தலைமையில் வியாபாரிகள் ஊா்வலமாக வந்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டனா். பின்னா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துராமலிங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தனா்.
நிகழ்ச்சியில், நாடாா் வியாபாரிகள் சங்கச் செயலா் செல்வகுமாா், யாதவ வியாபாரிகள் சங்கத் தலைவா் பெரியசாமி, செயலா் மூா்த்தி, செந்தூா் அனைத்து வியாபாரிகள் சங்கப் பொருளாளா் ச.மா.காா்க்கி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.