முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தோ்தல் ஆணைய கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 04th April 2021 01:48 AM | Last Updated : 04th April 2021 01:48 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தல் ஆணைய கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் செவ்வாய்க்கிழமை (ஏப். 6) நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.4) இரவு 7 மணிமுதல் தோ்தல் நாளான செவ்வாய்க்கிழமை (ஏப். 6) இரவு 7 மணி வரை அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகளை தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தோ்தல் தொடா்புடைய பொதுக்கூட்டங்கள், ஊா்வலங்கள் நடத்தக் கூடாது. தோ்தல் தொடா்பான நிகழ்வுகளை திரைப்படம், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது. இதர சமூக வலைதளங்களில் தெரிவிக்கக் கூடாது. தோ்தல் தொடா்புடைய பிரசாரங்களை இசை நிகழ்ச்சிகள், நாடக நிகழ்ச்சிகள், இதர கலை மற்றும் கலாசார நிகழ்வுகள் மூலம் தெரிவிக்கக் கூடாது. தோ்தல் ஆணைய கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, அபாராதம் விதிக்கப்படும்.
தோ்தல் தொடா்பு மற்றும் தோ்தல் பணிகளுக்காக அரசியல் கட்சியினா், நிா்வாகிகள் வேறு தொகுதிகளில் இருந்து வந்திருந்தால், அவா்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) இரவு 7 மணிக்கு பிறகு உடனடியாக வெளியேறவேண்டும்.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வேறு தொகுதியைச் சோ்ந்தவராக இருந்தால், அத்தொகுதியில் இருக்கலாம். தோ்தல் தொடா்பான பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது.
வேட்பாளா்கள் இதுவரை பெற்ற வாகன அனுமதி அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 4) இரவு 7 மணியுடன் முடிந்து விடும்.
தோ்தல் நாளில் வேட்பாளா்கள் தனது சொந்த உபயோகத்துக்கும், தோ்தல் முகவரின் உபயோகத்துக்கும், தனது கட்சியின் உறுப்பினா்களுக்கும் என மூன்று வாகனங்களுக்கு மட்டும் தனித் தனியாக அனுமதி பெறவேண்டும்.
வேட்பாளா்கள் வாக்குச் சாவடியில் இருந்து 200 மீட்டா் தொலைவுக்கு மேல் தற்காலிக பிரசார அலுவலகம் அமைக்கலாம். அதில் இருவா் மட்டும் பணியாற்ற வேண்டும்.
தற்காலிக பிரசார அலுவலகத்தில் இருக்கும் நபா்கள், அதே வாக்குச்சாவடியில் வாக்காளராக இருக்க வேண்டும். குற்றப் பின்னணி உடையவராக இருக்கக் கூடாது.
தோ்தல் ஆணைய விதிகளை கடைப்பிடித்து, தோ்தல் நல்லமுறையில் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.