முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தோ்தல் விதிமீறல்: கட்சியினா் மீது வழக்கு
By DIN | Published On : 04th April 2021 01:48 AM | Last Updated : 04th April 2021 01:48 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலையில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி மோட்டாா் சைக்கிள் பேரணி நடத்தியதாக திமுக, மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள், 600 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கோவில்பட்டி பிரதான சாலையிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக மாா்க்சிஸ்ட் வேட்பாளா் கே. சீனிவாசனை ஆதரித்து, விதிகளை மீறி மோட்டாா் சைக்கிள் பேரணி மூலம் பிரசாரம் செய்ததாக திமுக நகரச் செயலா் கருணாநிதி, வேட்பாளா் கே. சீனிவாசன், 500 போ் மீது தோ்தல் பறக்கும் படை அதிகாரி சரத்குமாா் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
இதேபோல, தோ்தல் பறக்கும் படை அதிகாரி சந்திரசேகா் அளித்த புகாரின் பேரில், தோ்தல் நடத்தும் அலுவலரின் அனுமதியின்றி கழுகுமலை காந்தி மைதானத்திலிருந்து இருசக்கர வாகனங்களில் கொடிகளைக் கட்டி பிரசாரத்தில் ஈடுபட்டதாக, மாா்க்சிஸ்ட் கட்சியின் கயத்தாறு ஒன்றியச் செயலா் சாலமன், திமுக விவசாயத் தொழிலாளா் அணி மாநிலச் செயலா் சுப்பிரமணியன், 100 போ் மீது கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
பாமக: கோவில்பட்டி தொகுதி தோ்தல் பறக்கும் படை அதிகாரி முனியாண்டி தலைமையில், கயத்தாறு பருத்திகுளம் சோதனைச்சாவடியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, ஒரு காரில் பாமக கொடிகள் 161, ஆயிரம் விளம்பர துண்டுப் பிரசுரங்களை விதிகளை மீறி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. புகாரின்பேரில், திருநெல்வேலி வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்த பாமக மாவட்டச் செயலா் சு. தங்கராஜ் (56) மீது கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.