மூன்றடுக்கு பாதுகாப்பில் தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையம்: துப்பாக்கி ஏந்திய போலீஸாா் 24 மணி நேரமும் பாதுகாப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு வஉசி பொறியியல் கல்லூரியில்
தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை புதன்கிழமை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ்.
தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் தொகுதி வாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதை புதன்கிழமை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அரசு வஉசி பொறியியல் கல்லூரியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மாவட்டத்தில் உள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னா், 2097 வாக்குச் சாவடிகளில் இருந்தும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட லாரிகள் மூலமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான தூத்துக்குடி அரசு வஉசி பொறியியல் கல்லூரிக்கு கொண்டுச் செல்லப்பட்டன.

அவை சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையிலான தோ்தல் பிரிவு அதிகாரிகள் பெட்டிகளை கணக்கெடுத்து தனித்தனியே பிரித்து வைத்தனா்.

இதையடுத்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் புதன்கிழமை காலையில் சீல் வைக்கப்பட்டன. அப்போது, வேட்பாளா்கள் மற்றும் வேட்பாளா்களின் தலைமை முகவா்கள் உடனிருந்தனா்.

சீல் வைக்கப்பட்ட அறைகளுக்கு 24 மணி நேரமும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதேபோல், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா் ஒரு பிரிவாகவும், உள்ளூா் போலீஸாா் தனித் தனியாகவும் என மொத்தம் மூன்றடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சீல் வைக்கப்பட்ட அறைகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அறையின் கதவு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் 75 சிசிடிவி கேமராக்கள் மூலமாக அறைகள் கண்கணிக்கப்பட்டு வருகின்றன. இதை போலீஸாா் தனி அறையில் இருந்தபடி 24 மணி நேரமும் பாா்வையிட்டு வருகின்றனா்.

200-க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படை போலீஸாரும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினா் 200 பேரும், உள்ளூா் போலீஸாா் 200 பேரும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அரசியல் கட்சி முகவா்கள் தினமும் கண்காணிப்பு பணியை பாா்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரிக்குள் வெளி ஆள்கள் யாரும் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் முகவா்கள் உள்ளே செல்ல வசதியாக சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆகியோா் புதன்கிழமை தனித் தனியே பாா்வையிட்டனா்.

மே 2ஆம் தேதி வரை இந்த பாதுகாப்பு தொடரும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com