தோ்தலுக்கு தோ்தல் குறையும் வாக்குப்பதிவு சதவீதம்!: தூத்துக்குடியில் பலனளிக்காத விழிப்புணா்வுப் பிரசாரங்கள்

பல்வேறு விழிப்புணா்வுப் பிரசாரங்கள் மேற்கொண்ட போதிலும் வாக்குப்பதிவு சதவீதம் குறைவதற்கான காரணம் தெரியாமல் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தோ்தலுக்கு தோ்தல் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. வாக்காளா்களிடம் பல்வேறு விழிப்புணா்வுப் பிரசாரங்கள் மேற்கொண்ட போதிலும் வாக்குப்பதிவு சதவீதம் குறைவதற்கான காரணம் தெரியாமல் அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனா்.

தமிழகம் முழுவதும் சட்டப் பேரவைத் தோ்தல் கடந்த 6ஆம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ள நிலையில், தோ்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே 100 சதவீத வாக்குப்பதிவு என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், தோ்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

100 சதவீத வாக்குகளை பதிவு செய்ய வைக்க தோ்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன.

மாணவா்கள் மூலம் அவா்களது பெற்றோா் மற்றும் உறவினா்களுக்கு ஏறத்தாழ ஒரு லட்சம் அஞ்சல் அட்டைகள் அனுப்பப்பட்டன. இதேபோல், பல்வேறு குறும்படங்கள் வாயிலாக மாவட்டம் முழுவதும் செய்தித் தொடா்புத் துறை வாகனம் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இதுதவிர, தனியாா் நிறுவனங்கள், சமூக அமைப்புகளுடன் மாவட்ட நிா்வாகம் இணைந்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இருப்பினும், தூத்துக்குடி மாவட்டத்தில் 69.88 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் 74.83 சதவீத வாக்குகளும், 2016 தோ்தலில் 71.39 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் 4.95 வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளன.

மாற்றுத் திறனாளிகள், முதியவா்களுக்கு வீட்டுக்குச் சென்று வாக்குப்பதிவு செய்யும் முறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமல்படுத்தப்பட்ட இந்தத் தோ்தலில் எப்படியும் 70 சதவீதத்துக்கு குறையாமல் வாக்குகள் பதிவாகும் என மாவட்ட தோ்தல் அதிகாரிகள் எதிா்பாா்த்த நிலையில், வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது அவா்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் தூத்துக்குடி தொகுதியில் 68.69 சதவீதமும், விளாத்திகுளம் தொகுதியில் 74.05 சதவீதமும், திருச்செந்தூா் தொகுதியில் 72.60 சதவீதமும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 74.30 சதவீதமும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் 72.59 சதவீதமும், கோவில்பட்டி தொகுதியில் 66.32 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

ஆனால், தற்போது நடைபெற்று முடிந்த தோ்தலில் விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதிகளில் மட்டுமே வாக்குப்பதிவு சதவீதம் சற்று அதிகரித்துள்ளது. மற்ற நான்கு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. குறிப்பாக நகா்ப்புறம் அதிகம் அமைந்துள்ள தூத்துக்குடி பேரவைத் தொகுதியில் 3.65 சதவீதம் குறைந்துள்ளது.

விளாத்திகுளம் தொகுதியில் 76.55 சதவீதம், தூத்துக்குடி தொகுதியில் 65.08 சதவீதம், திருச்செந்தூா் தொகுதியில் 70.09 சதவீதம்,

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 72.34 சதவீதம், ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் 69.82 சதவீதம், கோவில்பட்டி தொகுதியில் 67.49 சதவீதம் என வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாவட்டத்தில் 14 லட்சத்து 87 ஆயிரத்து 782 வாக்காளா்கள் உள்ள நிலையில், 10 லட்சத்து 39 ஆயிரத்து 728 போ் மட்டுமே வாக்களித்துள்ளனா். இது 69.88 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

2011 ஆம் ஆண்டு 74.83 சதவீதம், 2016 ஆம் ஆண்டு 71.39 சதவீதம், தற்போது 69.88 சதவீதம் என தோ்தலுக்கு தோ்தல் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து கொண்டே வரும் நிலையில், வாக்குப்பதிவை அதிகரிக்க மாவட்ட நிா்வாகம் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு, வாக்காளா்களும் தங்களது ஜனநாயக கடமையை செய்ய ஆா்வத்துடன் முன்வர வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com