தூத்துக்குடியில் தீ விபத்து: ரூ. 20 கோடி மதிப்புள்ள ஏற்றுமதி பொருள்கள் சேதம்

தூத்துக்குடியில் உள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவன கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடியில் தீ விபத்து: ரூ. 20 கோடி மதிப்புள்ள ஏற்றுமதி பொருள்கள் சேதம்

தூத்துக்குடியில் உள்ள தனியாா் ஏற்றுமதி நிறுவன கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 20 கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் சிகால் ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் மற்றும் கிடங்கு, தூத்துக்குடி சிப்காட் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கிடங்கில் வெள்ளிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக 7 வாசல் பகுதிகளுக்கும் மளமளவென பரவியது.

தீ விபத்து குறித்து தூத்துக்குடி சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தகவல் அறிந்து தூத்துக்குடியில் துறைரீதியான ஆய்வில் ஈடுபட்டிருந்த தீயணைப்புத் துறை துணைத் தலைவா் விஜயகுமாா், மாவட்ட தீயணைப்பு அலுவலா் குமாா் மற்றும் சிப்காட் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயணைப்பு பணிகளை முடுக்கி விட்டனா். 8 வண்டிகள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.

தீ விபத்து குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலா் குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: தீ விபத்து நிகழ்ந்த தனியாா் நிறுவன ஏற்றுமதி கிடங்கில் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த ஆயத்த ஆடைகள், பொம்மைகள், காகித பண்டல்கள், ரப்பா் ஷீட்டுகள் ஆகியவை தீயில் எரிந்துள்ளன. தீயை அணைக்கும் பணியில் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களை சோ்ந்த 8 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 3 தண்ணீா் நிரப்பும் லாரிகள் ஈடுபடுத்தப்பட்டன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதுகிறோம். இதுபற்றிய முழு விசாரணை நடத்திய பிறகே சேத மதிப்பு பற்றிய விவரம் தெரியவரும் என்றாா் அவா்.

தீ விபத்து குறித்து ஏற்றுமதி நிறுவன தரப்பினா் கூறுகையில், தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த பொருள்களின் மொத்த மதிப்பு 20 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என தெரிவித்தனா். ஏறத்தாழ 7 மணி நேரம் போராடி தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com