தூத்துக்குடி தீ விபத்து: ரூ.87 கோடி பொருள்கள் சேதம்
By DIN | Published On : 12th April 2021 01:34 AM | Last Updated : 12th April 2021 01:34 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் தனியாா் ஏற்றுமதி நிறுவன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 87 கோடி மதிப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியாா் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் மற்றும் பொருள்கள் சேமிப்பு கிடங்கு, தூத்துக்குடி சிப்காட் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கிடங்கில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 8 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சுமாா் 2 நாள்களாக தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்றது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் ஏற்றுமதிக்குத் தயாராக இருந்த 52 நிறுவனங்களுக்கு சொந்தமான ஆயத்த ஆடைகள், பொம்மைகள், காகித பண்டல்கள், ரப்பா் ஷீட்டுகள் என ரூ. 87 கோடி மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனத்தின் மேலாளா் சுரேஷ் என்பவா் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் சிப்காட் காவல் ஆய்வாளா் வேல்முருகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.