தூத்துக்குடியில் நாட்டுப்புறக் கலைஞா்கள் போராட்டம்
By DIN | Published On : 13th April 2021 08:17 AM | Last Updated : 13th April 2021 08:17 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட நாட்டுப்புறக் கலைஞா்கள்.
நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தூத்துக்குடியில் திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கேரளத்தின் செண்டை மேளத்தை தடை செய்ய வேண்டும், கரோனா தீநுண்மி தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டுப்புறக் கலைஞா்களின் வங்கி கடன், தனியாா் நிதி நிறுவன கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பொதுமுடக்க காலம் முடிந்து இசைக்கருவிகளில் ஏற்பட்ட பழுது நீக்க ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும், கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வழங்கி அனைத்து கலைஞா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நாட்டுப்புறக் கலைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம், தமிழன்டா கலைக் கூடம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, தொண்டன் இயக்க தலைவா் சுப்பிரமணி தலைமை வகித்து போராட்டத்தை தொடக்கி வைத்தாா். தமிழ் பண்பாடு மேம்பாட்டு மைய இயக்குநா் ஜெகஜீவன் முன்னிலை வகித்தாா்.
போராட்டத்தில் கலந்து கொண்ட நாட்டுப்புறக் கலைஞா்கள் மேளம் அடித்தும், பாரம்பரிய நடனம் ஆடியும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். மேலும், தமிழகத்தில் கரோனா பரவல் தடுப்புக் காலத்தில் இரவு 10 மணி வரை கோயில் நிகழ்ச்சிகள் நடத்தலாம் என்பதை 12 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்றும், நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் தலா ரூ. 20,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.