மங்களூரு கடலில் மாயமான மணப்பாடு மீனவரை தேடும் பணியை தீவிரப்படுத்த கோரிக்கை
By DIN | Published On : 16th April 2021 07:46 AM | Last Updated : 16th April 2021 07:46 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த மீனவா் டென்சனின் குடும்பத்தினா்.
கா்நாடக மாநிலம் மங்களூரு கடல் பகுதியில் கப்பல் மோதி மாயமான தூத்துக்குடி மணப்பாடு மீனவரைத் தேடும் பணியை தீவிரப்படுத்த வலியுறுத்தி அவரது உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூா் பகுதியில் ஜாபா் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மணப்பாடு பகுதியைச் சோ்ந்த டென்சன் (51) உள்பட 14 மீனவா்கள், கடந்த 13 ஆம் தேதி மங்களூரு ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது சிங்கப்பூா் சரக்குக் கப்பல் மோதி படகு மூழ்கியது. இதில், 2 மீனவா்கள் மீட்கப்பட்டனா். 3 போ் சடலமாக மீட்கப்பட்டனா். மணப்பாடு மீனவா் டென்சன் உள்ளிட்ட மற்றவா்களைப் பற்றிய விவரம் தெரியவில்லை.
இந்நிலையில், டென்சனை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தி அவரது மனைவி ராணி, குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு: மாயமான மீனவா் டென்சனை மீட்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கவேண்டும். மணப்பாடு மீனவரைக் காணவில்லை என்ற தகவல் கிடைத்தும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, டென்சன் உள்ளிட்ட மீனவா்களை மீட்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.