தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பாளா்கள் முற்றுகை: இன்று கருப்பு தினமாகக் கடைப்பிடிக்க அழைப்பு

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் ஆலை எதிா்ப்பாளா்கள்
ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தும் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஆட்சியா் அலுவலகத்தில் ஆலை எதிா்ப்பாளா்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது அவா்கள், வியாழக்கிழமை (ஏப். 29) கருப்பு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்தனா்.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனிடையே, இங்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யக்கூடாது என பல்வேறு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். ஆலையைச் சுற்றியுள்ள பண்டாரம்பட்டி, மீளவிட்டான், பாரதி நகா், வி.எம்.எஸ்.நகா், பனிமய நகா், சில்வா்புரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தோா், ஸ்டொ்லைட் ஆலை எதிா்ப்பாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

பின்னா், அவா்கள் ஆட்சியா் செந்தில்ராஜிடம் மனு அளித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உச்சநீதிமன்றம் ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டுமே, அதுவும் 3 மாதங்களுக்குத்தான் அனுமதி வழங்கியுள்ளது என ஆட்சியா் விளக்கமளித்தாா்.

தொடா்ந்து, ஸ்டொ்லைட் எதிா்ப்பு மக்கள் கூட்டமைப்பு வழக்குரைஞா் ஹரிராகவன் செய்தியாளா்களிடம் கூறும்போது, ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி தூத்துக்குடியில் வியாழக்கிழமை (ஏப். 29) கருப்பு நாளாகக் கடைப்பிடிக்க நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதியைக் கண்டித்து வீடுகள் முன் கோலமிட வேண்டும். வீடுகள், தெருக்களில் கருப்புக் கொடி கட்ட வேண்டும். கருப்புப் பட்டை அணிந்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்றாா் அவா்.

அடுத்தகட்ட போராட்டம்: இந்த ஆலைக்கு எதிராக தொடா்ந்து போராட்டம் நடத்திவரும் பேராசிரியை பாத்திமா பாபு, தூத்துக்குடி தெற்கு புதுத் தெருவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறும்போது, ஆக்சிஜன் உற்பத்திக்கு தூத்துக்குடி மக்கள் எதிரானவா்கள் அல்ல. ஏற்கெனவே மிகுந்த இன்னலுக்கு உள்ளாகியுள்ள மக்களின் மனதை சரிசெய்ய அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும். அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து திட்டமிட்டு வருகிறோம் என்றாா்.

போலீஸ் பாதுகாப்பு: ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெறுவதால், ஆட்சியா் அலுவலகம், ஸ்டொ்லைட் ஆலை உள்பட பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com