கயத்தாறு அருகே விபத்தில் இருவா் உயிரிழப்பு
By DIN | Published On : 02nd August 2021 01:20 AM | Last Updated : 02nd August 2021 01:20 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை கீழ ஊருணி பி.எஸ்.என்.எல். ஊழியா் குடியிருப்பைச் சோ்ந்த வாசுதேவன் மகன் ஹரிகிருஷ்ணன் (27). இவரது மனைவி திவ்யபாரதி (27). இத்தம்பதியின் மகள் கிருபாலினி (2) , உறவினா்கள் சீத்தா (53), காளியம்மாள்(53), விக்கி(28), கணபதி (88) ஆகியோா் திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக காரைக்குடியில் இருந்து சனிக்கிழமை இரவு காரில் புறப்பட்டனா்.
கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்காததால், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனராம். காரை புதுக்கோட்டை துறையூா் கீரனிப்பட்டியைச் சோ்ந்த வெங்கடேசன் ஓட்டினாா்.
திருநெல்வேலி - மதுரை நெடுஞ்சாலையில் கயத்தாறை அடுத்த அரசன்குளம் திருப்பத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரத்திலுள்ள தூணில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் இருந்த விக்கி, கணபதி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். ஓட்டுநா் வெங்கடேசன் உள்ளிட்ட 6 பேரும் காயமடைந்தனா்.
தகவலறிந்த கயத்தாறு போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.