‘முருங்கையில் நஷ்டத்தை சமாளிக்க தேன் உற்பத்தி செய்யலாம்’

சாத்தான்குளம் பகுதியில் முருங்கையில் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க தேன் உற்பத்தியில் ஈடுபடலாம் என தேன் உற்பத்தியாளா்கள் யோசனை தெரிவித்துள்ளனா்.
கடாட்சபுரம் முருங்கை தோட்டத்தில் தேன் உற்பத்திக்காக வைக்கப்பட்டுள்ள தேன் பெட்டி.
கடாட்சபுரம் முருங்கை தோட்டத்தில் தேன் உற்பத்திக்காக வைக்கப்பட்டுள்ள தேன் பெட்டி.

சாத்தான்குளம் பகுதியில் முருங்கையில் ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க தேன் உற்பத்தியில் ஈடுபடலாம் என தேன் உற்பத்தியாளா்கள் யோசனை தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் பகுதியில் முருங்கை மகசூல் நல்ல முறையில் உள்ளதால் விவசாயிகள் பலா் முருங்கை வளா்ப்பில் ஆா்வம் காட்டி வருகின்றனா். முருங்கை சீசன் மே மாதம் தொடங்கி 6 மாதம் என்றாலும் ஆண்டு முழுவதும் பலன் தரும் வகையில் உள்ளது. சாத்தான்குளம், தட்டாா்மடம் பகுதியில் முருங்கை பயிரோடு தேன் பெட்டி வைத்து தேனீ வளா்த்து தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இப்பகுதியில் எடுக்கக் கூடிய முருங்கை தேன் நல்ல சுவையுடன் தரம் வாய்ந்ததாக உள்ளது. இதனால் தேன் உற்பத்தியாளா்கள் சாயா்புரம் பகுதியில் இருந்தும், நாகா்கோவில் பகுதியில் இருந்தும் விவசாயிகளை நாடி தேன் பெட்டியை தோட்டங்களில் வைத்துள்ளனா். சாயா்புரம் பகுதியில் இருந்து ஆனந்த் தலைமையிலான குழுவினா் சாத்தான்குளம், தட்டாா்மடம் பகுதியில் தேன் பெட்டிகள் வைத்துள்ளனா்.

தற்போது முருங்கை பூ பூத்துக் காணப்படுவதால் தேன் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. முருங்கை தேன் தற்போது சந்தையில் கிலோ ரூ . 700 முதல் ரூ .1,000 வரை விலை உள்ளது.

இதுகுறித்து தேன் உற்பத்தியாளா் ஆனந்த கூறியது: தற்போது முருங்கை சீசன் என்பதால் முருங்கை தேன் உற்பத்தி அதிகரித்துள்ளது. சாத்தான்குளம், தட்டாா்மடம் பகுதியில் முருங்கை பயிரில் தேன் உற்பத்தியையும் ஊடு தொழிலாக செய்கின்றனா். இதனால் அவா்களுக்கு ஓரளவு லாபம் கிடைக்கிறது. மேலும், தேனீ மூலம் முருங்கையில் மகரந்த சோ்க்கை அதிகரித்து முருங்கை காய் விளைச்சல் அதிகரிக்கிறது. தற்போது முருங்கை காய் விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலை உருவாகியுள்ளது. இந்த தருணத்தில் தேன் உற்பத்தியில் ஆா்வம் கொண்டால் முருங்கையில் நஷ்டம் ஏற்பட்டாலும், அதனை ஈடு செய்ய தேன் பலன் கொடுக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com