திருச்செந்தூரில் சாலைப்பணியால் போக்குவரத்து நெரிசல்
By DIN | Published On : 13th August 2021 12:46 AM | Last Updated : 21st August 2021 12:07 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் ரதவீதியில் நடைபெற்று வரும் சாலைப்பணி குறித்து அறிவிப்பு பதாகைகளை வைத்து போக்குவரத்து நெரிசலை தவிா்க்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழக்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் கந்த சஷ்டி, ஆவணி மற்றும் மாசித்திருவிழா, விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் என ஆண்டு முழுவதுமே திருவிழாக்கள் நிறைந்து காணப்படுகிறது.
முருகப்பெருமானை வழிபடுவதற்காக லட்சக்கணக்கான பக்தா்கள் விரதமிருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் இங்கு வந்து செல்கின்றனா். இதனால் திருச்செந்தூா் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும்.
கரோனா பொதுமுடக்க தளா்வுகளுக்குப் பிறகு இத்திருக்கோயில் கடந்த ஜூலை மாதம் 5-ஆம் தேதி முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும் கூட்ட நெரிசலைத் தவிா்த்திடும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே மற்ற நாள்களில் திரளான பக்தா்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.
போக்குவரத்து நெரிசல் : திருச்செந்தூரில் தேரோடும் ரதவீதிகள் மற்றும் உள்தெருக்கள் ரூ. 2.70 கோடியில் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. இதில் தெற்குரவீதி, கீழரதவீதி சாலைப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இச்சாலைப்பணியினால் ஒரு வழிப்பாதை தடைப்பட்டுள்ளதுடன், கோயில் வாசலுக்கு பேருந்துகள் செல்ல முடியாத நிலையும் உள்ளது. கடந்த 1-ஆம் தேதி முதல் வடக்குரதவீதி சாலை திருவிழாவுக்கு பின்னா் சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வடக்கு ரதவீதியில் சாலைப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இதனால், வாகனங்கள் தெற்குரதவீதி வழியாக கோயிலுக்கு வந்து செல்கின்றன. ஆனால் வடக்குரதவீதி நுழைவாயிலில் சாலைப்பணி குறித்து அறிவிப்பு பதாகைகள் இல்லாததால், வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் பாதி தொலைவு சென்று மீண்டும் திரும்பி வரும் நிலை தொடா்கிறது. இதனால் , போக்குவரத்து காவலா்கள் இல்லாத நேரத்தில் வடக்குரதவீதி - மேலரதவீதி சந்திப்பு பகுதியான இரும்பு வளைவுப்பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பக்தா்களும், வாகன ஓட்டிகளும் சிரமமடைந்து வருகின்றனா். எனவே முறையான அறிவிப்பு பதாகை வைத்து, வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.