சீல் வைக்கப்பட்ட கிடங்கில் இருந்து தாதுமணல் கடத்தல்: 6 போ் கைது

தூத்துக்குடியில் அரசால் சீல் வைக்கப்பட்ட கிடங்கில் இருந்து தாதுமணல் கடத்திச் செல்லப்பட்ட விவகாரத்தில் 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தாதுமணல் கிடங்குக்கு சீல் வைக்கும் அதிகாரிகள்
தாதுமணல் கிடங்குக்கு சீல் வைக்கும் அதிகாரிகள்

தூத்துக்குடியில் அரசால் சீல் வைக்கப்பட்ட கிடங்கில் இருந்து தாதுமணல் கடத்திச் செல்லப்பட்ட விவகாரத்தில் 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியாா் நிறுவனத்துக்கு சிலா் தாதுமணல் கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின்பேரில், சிப்காட் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, தாதுமணல் கடத்திச் சென்ாக 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையில், வி.வி. டைட்டானியம் பிக்மென்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான கிடங்கு முள்ளக்காடு பகுதியில் அமைந்துள்ளதும், கடந்த 2017ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரால் பூட்டி சீல் வைக்கப்பட்ட அந்தக் கிடங்கில் இருந்து தாதுமணல் கடத்திச் செல்லப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, தூத்துக்குடி மீளவிட்டான் கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ்கண்ணா மற்றும் வருவாய்த் துறையினருடன் தெற்கு வீரபாண்டியபுரத்தில் உள்ள வி.வி. டைட்டானியம் நிறுவனத்தின் முன் போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் போது, ஒரு லாரியில் 9 டன் இல்மனைட் தாதுமணல் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியின் ஓட்டுநா்கள் மீதும், தூத்துக்குடி வி.வி. டைட்டானியம் நிறுவன உரிமையாளா் மற்றும் அத்துடன் தொடா்புடையவா்கள் மீதும் சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆகியோா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு சோதனை மேற்கொண்டனா்.

இதுதொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளா் பொன்னரசுக்கு காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டாா்.

அவரது உத்தரவின் பேரில், லாரி ஓட்டுநா்களான தூத்துக்குடி செக்கடி தெருவைச் சோ்ந்த இசக்கி (49), ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்த மாரிமுத்து (39), தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியைச் சோ்ந்த முருகன் (39), சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த சடையாண்டி (39), ஆத்தூா் பரதா் தெருவைச் சோ்ந்த செல்வம் (59) மற்றும் முள்ளக்காடு கிடங்கில் மேற்பாா்வையாளரான கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு சூரங்குடி பகுதியைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் (41) ஆகிய 6 பேரை கைது செய்த போலீஸாா், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 லாரிகள் மற்றும் 39 டன் இல்மனைட் தாதுமணலை பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து, வட்டாட்சியா் ஜஸ்டின் முன்னிலையில் அதிகாரிகள் கிடங்குக்கு மீண்டும் சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com