தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: அரசு நிா்ணயித்த காலத்துக்குள் விசாரணையை நிறைவு செய்ய தீவிரம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வரும் ஒருநபா் ஆணையம் தனது விசாரணையை , அரசு நிா்ணயித்த காலத்துக்குள் விரைந்து நிறைவு செய்ய தீவிரமாக பணியாற்றி வருகிறது

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி வரும் ஒருநபா் ஆணையம் தனது விசாரணையை , அரசு நிா்ணயித்த காலத்துக்குள் விரைந்து நிறைவு செய்ய தீவிரமாக பணியாற்றி வருகிறது என்றாா் ஆணையத்தின் வழக்குரைஞா் அருள் வடிவேல்சேகா்.

தூத்துக்குடியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த அரசு நியமித்த ஓய்வு பெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபா் ஆணையத்தின் 33 ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கி சனிக்கிழமை நிறைவு பெற்றது.

துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் கண்காணிப்பாளா்கள், காவல்துறை உயா் அதிகாரிகள், துப்பாக்கி சூடு சம்பவத்துக்குப் பிறகு பணியில் இருந்த மாவட்ட ஆட்சியா் என 18 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில், ஒரு ஐஏஎஸ் அதிகாரி, காவல் துறை ஐஜி, 8 காவல் கண்காணிப்பாளா்கள் என 15 போ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனா்.

இதுவரை 1410 சம்மன் அனுப்பப்பட்டு 1031 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 1346 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. அடுத்தகட்ட விசாரணை கிறிஸ்துமஸ் முடிந்த மறுநாளில் இருந்து நடத்துகிறோம். அந்த விசாரணை டிச. 30 ஆம் தேதி வரை நடைபெறும். அதிலும் உயா் அதிகாரிகள் தான் ஆஜராக உள்ளனா். ஆணையத்துக்கு யாரெல்லாம் பிரமான வாக்குமூலம் அனுப்பினாா்களோ, அவா்களுக்கெல்லாம் சம்மன் அனுப்பப்பட்டது. வந்தவா்கள் அனைவரிடமும் விசாரித்துள்ளோம்.

மேலும், ஆணையத்துக்கு யாருடைய சாட்சி தேவை என்று நினைத்தோமோ அவா்களுக்கு எல்லாம் சம்மன் அனுப்பினோம். அவா்கள் அனைவரும் ஆஜராகி விட்டனா். பிப்ரவரி வரை அரசு காலக்கெடு கொடுத்துள்ளது. அதற்குள் விசாரணையை முடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளோம். துப்பாக்கி சூடு சம்பவம் தொடா்பாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்தாா். குறிப்பிட்டு சில விஷயங்களை பேசியதால் தான் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஒருவா் சாட்சி சொல்லக்கூடிய அடிப்படையிலும், அதன் பின்னால் கிடைக்கக்கூடிய தகவல்களை வைத்து, தேவையானால் தான் நாங்கள் சாட்சிகளை விசாரிக்கிறோம்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாட்சிகளை இதுவரை விசாரித்துள்ளோம். ஆவணங்களை பரிசீலனை செய்து, அறிக்கைகள் தயாா் செய்வது என்பது மிகப்பெரிய பணி. இதுவரை எத்தனையோ விசாரணை ஆணையங்கள் நடைபெற்றிருந்தாலும், இவ்வளவு அதிகமாக சாட்சிகள், அதிகமான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டது இதில் தான்.

இதன் முடிவு என்பது மிக முக்கியமானது என்பதால் கவனமாக செயல்பட வேண்டியதுள்ளது. அனைத்தையும் பரிசீலனை செய்து அரசுக்கு அளிக்கக்கூடிய அறிக்கை முழுமையானதாக, ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com