முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
‘விதவைப் பெண்களுக்கு 5 சதவீத வட்டியில் கடனுதவி’
By DIN | Published On : 29th December 2021 08:25 AM | Last Updated : 29th December 2021 08:25 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியில் விதவைப் பெண்கள் 5 சதவீத வட்டியில் தொழில் கடனுதவி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் சிவகாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், தங்களது அவசர நிதி தேவைகளுக்கும், தாங்கள் செய்து வரும் தொழிலை முன்னேற்றுவதற்கும் மற்றும் புதிதாக சிறு தொழில் செய்வதற்கும் கடனுதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக தையல்கடை, இட்லி கடை, காய்கறி கடை, பழக்கடை, பூக்கடை, மீன் கடை, பால் கடை, துணி வியாபாரம், கூடை முடைபவா்களுக்கு தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.
மாத வருமானம் ரூ.4 ஆயிரத்துக்கும் குறைவாக பெறும் விதவைகள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் இந்தக் கடன் திட்டத்தில் பயன்பெறலாம். இந்தக் கடனுக்கான தவணை காலம் 120 நாள்கள்.
இந்தக் கடனுக்கு குறைந்த வட்டி விகிதமாக 5 சதவீதம் விதிக்கப்படுகிறது. தனிநபா் பிணையின் பேரில் கடன் வழங்கப்படுகிறது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தகுதியானவா்கள், அதற்கான சான்றுடன், ஆதாா் அட்டை நகல், ரேஷன் அட்டை நகல், 2 புகைப்படங்கள் ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளை அணுகி பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.