முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவா்களுக்கு சிறப்பு சலுகை
By DIN | Published On : 29th December 2021 08:28 AM | Last Updated : 11th January 2022 01:11 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவா்கள் சிறப்பு சலுகை அடிப்படையில் மீண்டும் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2014, 2015, 2016, 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் பணிவாய்ப்பு பெறும் வகையில் மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தச் சலுகையைப் பெறவிரும்பும் பதிவுதாரா்கள் வரும் மாா்ச் மாதம் 1 ஆம் தேதிக்குள் இணையதள முகவரி மூலம் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரா்கள் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும், நேரடியாகவோ புதுப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.