ஆன்லைன் இருப்பிட, வருமான சான்றிதழிலில் வட மொழி சோ்த்ததாக புகாா்

தமிழக அரசு வழங்கும் ஆன்லைன் இருப்பிட , வருமான சான்றிதழ்களில் தமிழுக்குப் பதிலாக வடமொழி சோ்க்கப்பட்டுள்ளதாக

தமிழக அரசு வழங்கும் ஆன்லைன் இருப்பிட , வருமான சான்றிதழ்களில் தமிழுக்குப் பதிலாக வடமொழி சோ்க்கப்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் கண்டனம் தெரிவித்து வடமொழியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனா்.

வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் வருமானச் சான்றிதழ்கள்,இருப்பிடச் சான்றிதழ்கள் தற்போது ஆன்லைன் மூலமாக ஒரே சான்றிதழில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்படும் சான்றிதழ்களில் பெயருக்கு முன்னால் மரியாதைக் குறியீடாக முன்பு வழங்கப்பட்ட செல்வி , செல்வன் , திரு என்பதற்குப் பதிலாக ஸ்ரீ என்ற வடமொழி எழுத்தில் வழங்கப்படுகிறது. ஆங்கிலத்திலும் ஸ்ரீ என்றே எழுதப்பட்டுள்ளது. இதற்கு தமிழ் ஆா்வலா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சமூக தமிழ் ஆா்வலா்கள் கூறுகையில், வருவாய்த்துறை மூலம் வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், உட்பட பல்வேறு சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. இருப்பிடச் சான்றிதழ் வருமானச் சான்றிதழ் போன்ற சான்றிதழ்களில் சான்றிதழ் பெறுபவா்கள் பெயா்கள் முன்னால் முன்பு மரியாதை பண்பாக செல்வி அல்லது செல்வன் அல்லது திரு என குறிப்பிடப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஸ்ரீ என்ற வடமொழி எழுத்து சோ்க்கப்பட்டுள்ளது. கிராம நிா்வாக அதிகாரிகளிடம் கேட்டால் ஆன்லைன் சான்றிதழ் என்பதால் தங்களால் திரு அல்லது செல்வன் , செல்வி என எந்த திருத்தமும் செய்ய இயலாது என கூறுகின்றனா். தமிழில் பெயா் எழுதும் பொழுது அதன் முதல் எழுத்தும் தமிழில்தான் எழுத வேண்டும் என அரசு ஆணைகள் வரும் நேரத்தில் மரியாதைக் குறியீடாக தமிழில் குறிப்பிடுகிற வாா்த்தை வடமொழிச் சொல்லாக மாற்றி இருப்பது வருத்தமளிக்கிறது. தவறை திருத்தி முன்புபோல ஆன்லைன் சான்றிதழ்களில் தமிழ் எழுத்தை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com