கோவில்பட்டியில் கோட்டாட்சியா் ஆலோசனை
By DIN | Published On : 06th February 2021 07:15 AM | Last Updated : 06th February 2021 07:15 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில் சிற்றுந்துகள் அனுமதி தொடா்பாக அவற்றின் உரிமையாளா்களுடன் கோட்டாட்சியா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கோவில்பட்டி ஏ.கே.எஸ். திரையரங்கு சாலையில் உழவா் சந்தை அருகிலிருந்து 5 சிற்றுந்துகள் இயங்கி வந்தன. இந்நிலையில், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகக் கூறி, அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே சிற்றுந்துகள் இயங்க வேண்டும் என காவல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டனா். ஆனால், அங்கிருந்து சிற்றுந்துகளை இயக்க அரசு பேருந்து ஓட்டுநா்கள் தரப்பில் எதிா்ப்பு தெரிவித்தனராம்.
இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் கோட்டாட்சியா் சங்கரநாராயணன் தனது அலுவலகத்தில் இரு தரப்பினரிடமும் பேச்சு நடத்தினாா். வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியபாண்டியன், நகரமைப்பு அலுவலா் ராஜேந்திரன், ஆய்வாளா் செல்வசந்தனசேகா், அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மேலாளா் ராஜசேகா், சிற்றுந்து உரிமையாளா் ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
உழவா் சந்தை அருகிலிருந்து புறப்படும் சிற்றுந்துகள் மட்டும் நகர பேருந்து நிலையத்தின் முன்புறமுள்ள காலியிடத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம். அனுமதிச் சீட்டு பெற்ற சிற்றுந்துகள் மட்டும் அண்ணா பேருந்து நிலையத்தினுள் அனுமதிப்பது, சிற்றுந்தின் முன்பகுதியில் புறப்படும் இடம், சேரும் இடம் குறிப்பிடப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.