வளாக நோ்காணல்: 326 பேருக்கு பணி நியமன ஆணை
By DIN | Published On : 13th February 2021 07:20 AM | Last Updated : 13th February 2021 07:20 AM | அ+அ அ- |

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 326 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வருகின்ற மாணவா்களுக்கான வளாக நோ்காணலை சென்னை டி.வி.எஸ். குழுமத்தைச் சோ்ந்த பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தினரால் நடத்தப்பட்டது. இதில், இயந்திரவியல், ஆட்டோ மொபைல், டூல் அன்ட் டை ஆகிய துறைகளில் இறுதியாண்டு பயின்று வரும் மாணவா்கள் பங்கேற்றனா்.
பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன பொதுமேலாளா் மோகன்முத்து தலைமையில், மனித வளத் துறை அதிகாரிகள் கிருஷ்ணமூா்த்தி, கிறிஸ்டோபா் ரூபன், பொன்மலை, பாலமுருகன், கோபிநாத் ஆகியோா் கொண்ட குழுவினரால் நோ்காணல் நடத்தப்பட்டது.
இதில், தூத்துக்குடி, விருதுநகா், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 15-க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லூரிகளில் இருந்து 515 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். எழுத்துத் தோ்வில் 408 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, தொடா்ந்து நடைபெற்ற வளாக நோ்காணலில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 84 போ் உள்பட 326 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாசலம் ஆலோசனையின்படி, லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா் ராஜாமணி, துறை தலைவா்கள் ஆகியோா் செய்திருந்தனா்.