தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ஒருநபா் ஆணையம் தனது 25-ஆவது கட்ட விசாரணையை திங்கள்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. அப்போது போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 போ் பலியானாா்கள். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபா் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. அவா் மாதந்தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறாா். அதன்படி ஏற்கெனவே 24 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்கள், போராட்டத்தில் பங்கேற்றவா்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிா்வாகிகள், வழக்குரைஞா்கள், பத்திரிகையாளா்கள், அரசு அலுவலா்கள், தீயணைப்பு வீரா்கள் என 616 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 850 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில், 25-ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரைச் சாலை விருந்தினா் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை ஆணைய அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விசாரணையில், சம்பவத்தின்போது, அரசு ஊழியா்களின் வாகனங்கள் எரிக்கப்பட்டது தொடா்பாக வாகனங்களை இழந்த வருவாய்த் துறை ஊழியா்கள் 33 போ் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டு இருந்தது. அவா்களில் 14 போ் நேரில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்தனா். தொடா்ந்து இந்த விசாரணை வரும் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.