திருச்செந்தூா் மாசித் திருவிழா: இன்று சிவப்பு சாத்தி சுவாமி வீதி உலா

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா ஆறாம் நாளான திங்கள்கிழமை இரவு சுவாமி வெள்ளித் தேரிலும், அம்மன் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா ஆறாம் நாளான திங்கள்கிழமை இரவு சுவாமி வெள்ளித் தேரிலும், அம்மன் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தனா். ஏழாம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி சண்முகப்பெருமான் செவ்வாய்க்கிழமை (பிப். 23) சிவப்பு சாத்தி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறாா்.

திருச்செந்தூா் கோயிலில் மாசித் திருவிழா கடந்த பிப். 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியருள்கின்றனா். திங்கள்கிழமை ஆறாம் திருவிழாவை முன்னிட்டு காலையில் சப்பரத்திலும், இரவில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப்பெருமான் திருவாவடுதுறை ஆதீன மண்டபத்திலும் எழுந்தருளினாா். அங்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் ஸ்ரீ ஜெயந்திநாதா் எழுந்தருளினாா். அங்கு வைத்து சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளித் தேரிலும், தெய்வானை அம்மன் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில், திருவாவடுதுறை ஆதீனத்தின் ஸ்ரீமத் அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், ஆதீன தென்மண்டல மேலாளா் ராமச்சந்திரன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து மேலக்கோயிலில் இருந்து சுவாமி குமரவிடங்கப்பெருமான் வெள்ளித்தேரிலும், தெய்வானையம்மன் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஆறாம் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து சுவாமியை வழிபட்டனா்.

இன்று சிவப்பு சாத்தி வீதி உலா: ஏழாம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து 8.30 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டி வோ் சப்பரத்தில் பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபம் சோ்கிறாா். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, மாலை 4.30 மணிக்கு சுவாமி சிவன் அம்சத்தில் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். எட்டாம் திருவிழாவான பிப். 24-ஆம் தேதி பச்சை சாத்தி எழுந்தருளல் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com