விளாத்திகுளத்தில் சிறப்புரையாற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
விளாத்திகுளத்தில் சிறப்புரையாற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

திமுக ஆட்சிக்கு வந்தால் ஹிட்லர் ஆட்சி வந்து விடும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திமுக ஆட்சிக்கு வந்தால் ஹிட்லர் ஆட்சி வந்து விடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சிக்கு வந்தால் ஹிட்லர் ஆட்சி வந்து விடும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்றுவரும் அதிமுக தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், விளாத்திகுளம் தொகுதியில் வைப்பாற்றின் குறுக்கே 5 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. வருணபகவன் அருளால் நல்ல மழை பெய்து மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

தானியப்பயிர்கள் அனைத்தும் நல்ல விளைச்சல் அடைந்துள்ளதை வரும் வழியில் பார்த்தேன். அனைவரது இல்லங்களிலும் தை பொங்கல் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக 2,500 ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  அதிமுக மூன்றாக உடைந்துவிடும் என்கிறார். எந்த காலத்திலும் உடையாது. மக்கள் செல்வாக்குள்ள இயக்கம் அதிமுக. மக்கள் தான் இந்த அரசாங்கத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். 

நான் வெறும் முதலமைச்சர் பணியை மட்டும் தான் செய்து வருகிறேன். இங்கே இருக்கிற மக்கள் தான் முதலமைச்சர்கள். மக்களோடு மக்களாக இருந்து மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கிற அரசாக அதிமுக அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. கரோனா பொதுமுடக்க காலத்தில் விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை என அனைத்து அத்தியாவசிய பொருள்களும் தந்து மக்களை பாதுகாத்த அரசு அதிமுக அரசு. தேர்தல் நேரத்தில் திமுக கவர்ச்சிகரமான அறிக்கைகளை, வாக்குறுதிகளை வெளியிடும். தேர்தல் முடிந்ததும் வாக்குறுதிகளும் திமுகவில் முடிந்து போய்விடும். 2006ல் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் தருவோம் என்றார்கள். விளாத்திகுளத்தில் எத்தனை பேருக்கு தந்தார்கள். நிலம் தராவிட்டாலும் பரவாயில்லை. நிலத்தை அபகரிக்கமாமல் இருந்தால் சரி என்ற நிலை தான் ஏற்பட்டது. ரவுடிகளுடன் விவசாயிகளை ஒப்பிட்டு பேசுகிறார் மு.க.ஸ்டாலின். 
வரக்கூடிய தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தோல்வியை தர வேண்டும். மக்கள் உஷாராக இருக்க வேண்டும். சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆக முடியும் என்ற நிலையை அதிமுக உருவாக்கி காண்பித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் ஹிட்லர் ஆட்சி வந்து விடும். அராஜகம் செய்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டுமா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். தமிழகத்தில் அமைதியான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. நாட்டு மக்களுக்கு தேவையான நன்மைகள் வழங்கப்பட்டு வருகிறது. எந்தெந்த காலகட்டத்தில் என்னென்ன நன்மைகள் செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். கரோனா காலகட்டத்தில் சரியான பரிசோதனைகள் மேற்கொண்ட காரணத்தினால் இந்தியாவிலேயே கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. பிரதமர் மோடி, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு, அனைத்து முதலமைச்சர்களும் காணொலிக் காட்சி மூலம் ஆலோசணை நடத்தினார். 

அப்போது பிரதமர் பேசுகையில், சரியான  முறையில் பரிசோதனைகள் மேற்கொண்ட காரணத்தினால் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து கொண்டிருக்கிறது. இதை போல மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பெருமிதத்தோடு தெரிவித்தார். எங்களுடைய ஆட்சி திறமையான ஆட்சி என்பதை நிரூபிக்க இதை விட என்ன சர்டிபிக்கேட் தேவை.
தமிழ்நாட்டில் படிப்படியாக கரோனா பொதுமுடக்க தளர்வுகளை அமல்படுத்தி வருகிறோம். இயல்பு நிலை திரும்பி கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பதில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. இதை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும். 
உணவு தானிய உற்பத்தியில் தொடர்ந்து தேசிய விருது பெற்றுள்ளோம். உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையில் தொடர்ந்து தேசிய விருது பெற்று வருகிறோம். நீர் மேலாண்மை, குடிமராமத்து திட்டத்தின் மூலம் தேசிய அளவில் 2019-20ஆம் ஆண்டில் விருது பெற்றுள்ளோம். திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கியதோடு மட்டுமல்லாது மின்வாரியத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரிய நடவடிக்கையினால் மின்உற்பத்தி உபரியாக இருக்கிறது. தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக உள்ளது. அதனால் தான் புதிய புதிய தொழில்கள் தமிழகத்தை தேடி வருகிறது. தமிழகம் தான் இன்றைக்கு தொழில் தொடங்க உகந்த மாநிலமாக உள்ளது. சட்டம் ஒழுங்கும் சிறப்பாக உள்ளது. அரசாங்கம் நிறைய உதவிகள் செய்கிறது. 2019 ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. 
அந்த மாநாட்டில் 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி மதிப்பில் தொழில் தொடங்க தொழிலதிபர்கள் முன்வந்துள்ளார்கள். 304 புதிய தொழில்கள் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. அதன்மூலம் பத்து லட்சம் நபர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். உலகமே, இந்தியாவே கரோனா வைரஸ் பாதிப்பில் இருக்கும் சூழலில் கூட தமிழ்நாட்டில் 60 ஆயிரம் கோடியில் 74 புதிய நிறுவனங்கள் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. நாட்டிலேயே கரோனா பொது முடக்க காலத்திலும் கூட புதிதாக தொழில் தொடங்க அதிக முதலீட்டாளர்களை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு. அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக உயர்ந்திருக்கிறது. 
அதிமுக அரசு மக்களுக்கான அரசு. ஆகவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் என்றார். முன்னதாக எட்டயபுரத்தில் தனியார் மண்டபத்தில் நெசவாளர்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது தமிழக அரசு நெசவாளர்களுக்கும், நெசவு தொழிலுக்கும் தமிழக அரசு செய்துள்ள சாதனை திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சிகளில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com