விவசாயிகளை அதிமுக அரசு பாதுகாத்து வருகிறது: முதல்வர்

குழந்தை வளர்ப்பை போன்று விவசாயிகளை அதிமுக அரசு பாதுகாத்து வருவதாக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது கோவில்பட்டி தொகுதி வில்லிசேரி ஊராட்சியில் பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது கோவில்பட்டி தொகுதி வில்லிசேரி ஊராட்சியில் பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

குழந்தை வளர்ப்பை போன்று விவசாயிகளை அதிமுக அரசு பாதுகாத்து வருவதாக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை, விவசாயிகள் என்று சொன்னாலே உழைப்பாளிகள் என்று பொருள். உழைக்க பிறந்தவர்கள் விவசாயிகள். யாரையும் எதிர்பாக்காமல் சொந்த காலில் நிற்பவர் விவசாயி மட்டுமே. உழைத்து அதில் வருகின்ற வருமானத்தை வைத்து வாழ்கின்ற மனிதர் நம்முடைய விவசாயி தான்.

இன்றைக்கு அந்த விவசாயிகளுக்கு என்னென்ன பிரச்சனைகள், அதனை எப்படி களைவது என்பதை எங்களுடைய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி கொண்டிருக்கிறது.

விவசாயத்திற்கு தேவையான நீரை எங்களுடைய அரசு சரியான முறையில் கொடுக்க வேண்டும் என்பதற்காக தான் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். இத்திட்டம் விவசாய பெருமக்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் அனைவரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்ற திட்டம். பருவ காலங்களில் பெய்கின்ற மழை நீர் முழுவதையும் சேமித்து, ஒரு சொட்டுநீர் கூட வீணாக கூடாது என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து, ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியவற்றை தூர் வாரி ஆழப்படுத்தி தண்ணீரை சேமித்து வேளாண் மக்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கும், குடிநீர் கிடைப்பதற்கும் வழிவகை செய்திருக்கின்றோம்.

பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக இழப்பீட்டுத் தொகை பெற்று தருகிறோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இழப்பீட்டு தொகையை அதிகமாக பெற்று தந்துள்ளோம்.

கடந்த 4 ஆண்டுகளில் 9400 கோடி ரூபாய் பயிர் இழப்பீட்டுத் தொகையாக பெற்று தந்த அரசு அம்மாவின் அரசு. அதேபோல புயல் மற்றும் வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம், நிவாரணங்களை வழங்குகிறோம்.

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் பயிர் பாதிப்பு ஏற்பட்ட போது, விவசாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளானார்கள். நஷ்டம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு அம்மாவுடைய அரசு இழப்பீட்டு தொகையை வழங்கியது.

கால்நடை வளர்ப்பில் புதிய தொழில்நுட்பகளை புகுத்தி, விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்ரோட்டில் 1,600 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான கால்நடை பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம், இரண்டும் அங்கே இணைந்து செயல்படும். அந்த ஆராய்ச்சி நிலையம் மூலமாக கலப்பின பசுக்கள் உருவாக்கப்பட்டு, நம்முடைய சீதோஷ்ண நிலைக்கு ஏற்றவாறு கலப்பின பசுக்கள் உருவாக்கி விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

விவசாயிகளுக்காக ஊட்டியில் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விந்து ஆராய்ச்சி நிலையம் துவங்கப்பட உள்ளது.

அதுமட்டுமல்ல, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளுக்கு சிறந்த விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக திண்டிவனத்தில் சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உணவுப் பூங்கா ஒன்று உருவாக்கி வருகிறோம்.

விவசாயிகள் அதிக அளவில் காய்கறி, பழங்களை உற்பத்தி செய்கின்ற போது, அப்பொருளின் விலை வீழ்ச்சியடைந்து, விவசாயிகளுக்கு உரிய லாபம்
கிடைப்பதில்லை.

விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் தலா 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்பதனக் கிடங்குகள் உருவாக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் அதிக அளவில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியாகும் இடங்களில், இந்த குளிர்பதனக் கிடங்குகள் விரைவில் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு விவசாய தொழிலாளர்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று குழந்தையை வளர்ப்பது போல எங்கள் அரசு விவசாயிகளை பாதுகாத்து வருகிறது.

விவசாயிகளின் தானியங்களை சேமித்து வைப்பதற்காக கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் சேமிப்பு கிடங்குகளை அமைத்து தந்திருக்கிறோம்.

கோவில்பட்டியில் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு பூச்சிமருந்து ஆய்வகம் அமைக்கப்பட்டது. கோவில்பட்டி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை ஆராய்ச்சி மையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. 

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2018-19ஆம் ஆண்டில் மட்டும் 201 கோடி ரூபாய் பயிர் காப்பீட்டு தொகையை 20 லட்சம் விவசாயிகளுக்கு அம்மாவின் அரசு பெற்று தந்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் அமைத்து அரசு விழா கொண்டாட அறிவித்தது தமிழக அரசு தான்.

நகரம் முதல் கிராமங்கள் வரை ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளில் 2000 அம்மா மினி கிளினிக் அம்மாவின் அரசால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி பகுதியில் மட்டும் 5 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மின் கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ பணியாளர் அந்த பகுதியிலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். 

அரசு பள்ளிகளில் 41 சதவிகித ஏழை, எளிய மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஏழை எளிய மாணவர்களும் மருத்துவ படிப்பை பயில வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

வயலில் வேலை செய்திருந்தால் அந்த கஷ்டம் தெரியும். கஷ்டமே தெரியாமல் வளர்ந்தவருக்கு விவசாயத்தை பற்றி என்ன தெரியும் என்று விமர்சித்தார்.

எதை பேசினாலும் சிந்தித்து பேச வேண்டும். விவசாயிகளின் மனம் புண்படும்படி இனியாவது திமுக தலைவர் பேச வேண்டாம் என்று விவசாயிகளின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com