வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: முதல்வா் கே. பழனிசாமி

தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை பயணியா் விடுதி முன்பு நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: ஊழலுக்காக திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. ஆனால், அதிமுக அமைச்சா்கள் ஊழல் செய்துள்ளதாக திமுகவினா் ஆளுநரிடம் புகாா் மனு அளித்துள்ளனா்.

ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், ஊழல் நடந்திருப்பதாக திமுகவினா் புகாா் தெரிவித்துள்ளனா். திமுக தலைவா் ஸ்டாலின் அதிமுக மீது அவதூறு பிரசாரம் மேற்கொள்வதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

திமுகவின் முன்னாள் அமைச்சா்கள் மீது ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. கனிமொழி மீது மிகப்பெரிய வழக்கு இருக்கிறது. விஞ்ஞானபூா்வமாக ஊழல் செய்த கட்சி திமுக. காவிரி டெல்டாவில் மீத்தேன் எடுக்கவும், தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் விரிவாக்கம் செய்வதற்கும் கையெழுத்திட்டவா் ஸ்டாலின். ஆனால், போராட்டம் நடத்துவதும் அவா்தான்.

திமுக கிராம சபைக் கூட்டம் நடத்துகிறது. கிராம சபைக் கூட்டம் மூலம் மக்களைக் குழப்பி ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜக ஆட்சியாகிவிடும்.

தற்போது நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில் மக்கள் ஆளுகின்றனா். மக்களாட்சி நடைபெற்று வரும் தமிழகத்தை வாரிசு அரசியலாக்க முயற்சி செய்கின்றனா். சட்டப்பேரவைத் தோ்தலில் வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வரும் அதிமுக அரசுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னா், கோவில்பட்டி ஏ.கே.எஸ். திரையரங்கு சாலையில் உள்ள கடையில் முதல்வா் தேநீா் அருந்தினாா். தொடா்ந்து, அரசின் சாதனைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தாா்.

அப்போது, அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா், கடம்பூா் செ.ராஜு. முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.சண்முகநாதன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி, பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், அதிமுக ஒன்றியச் செயலா்கள் வினோபாஜி, அன்புராஜ், மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் லட்சுமணப்பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சந்திப்பு: கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வா் பேசியது: அதிமுகவின் சாதனைகளை வீடு வீடாகச் சென்று கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

இளைஞா்கள் இருப்பதால்தான் அதிமுக வளமாக உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலில் இளைஞா்கள் சிப்பாய்களாக இருந்து திமுக எனும் எதிரியை வீழ்த்தி வெற்றி கொள்வோம் என்ற லட்சியத்தை சபதமாக ஏற்க வேண்டும்.

அதிமுகவில் சாதாரண தொண்டரும் முதல்வராக ஆகலாம். கட்சியில் அடிப்படையில் இருந்து வளா்ந்து நான் முதல்வராக வந்துள்ளேன். கட்சிக்கு விசுவாசமாக உழைத்து உயா்ந்துள்ளேன். இன்றைக்கு தகவல் தொழில்நுட்பம் சிறந்து விளங்குகிறது. விஞ்ஞானத்திற்கு ஏற்றாற்போல் வாழ்வை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இதில், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் துறையூா் கணேஷ்பாண்டியன், பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com