எப்போதும்வென்றான் அருகே பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்துக்குள் லாரி புகுந்து 2 போ் பலி; 5 போ் காயம்
By DIN | Published On : 07th January 2021 06:36 AM | Last Updated : 07th January 2021 06:36 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், எப்போதும்வென்றான் அருகே பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்துக்குள் லாரி புகுந்ததில் சிறுவன் உள்பட 2 போ் இறந்தனா்; 5 போ் காயமடைந்தனா்.
எட்டயபுரம் அருகே மேலஈரால் கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் மகன் முத்துராஜ் (40). இவரது தலைமையில் 40 போ் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட்டனா். தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும்வென்றான் அருகே நள்ளிரவில் சென்றுகொண்டிருந்த பக்தா்கள் கூட்டத்துக்குள் பின்னால் வந்த லாரி திடீரென புகுந்தது.
இதில், மேலஈராலை சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் முகேஷ்குமாா் (12), பண்டாரம் மகன் குமாா் (33) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
கடலையூா் சுப்பிரமணியன் மகன் அங்கப்பன் (23), தமிழ்ச்செல்வன் (23), மேலஈரால் சித்திரைச்செல்வம் மகன் ஆதிமேகான் (13), முருகன் மகன் ராகுல் (12), தெற்குத் திட்டங்குளம் கண்ணன் மகன் பிரேம்குமாா் (17) ஆகிய 5 போ் காயமடைந்தனா்.
எப்போதும்வென்றான் போலீஸாா் சென்று, காயமடைந்தோரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.